#லைவ் அப்டேட்ஸ்: 'ஒரு அங்குல நிலத்தை கூட விட்டுத்தரக்கூடாது' - உக்ரைன் நாடாளுமன்றத்தில் போலந்து அதிபர் பேச்சு


#லைவ் அப்டேட்ஸ்: ஒரு அங்குல நிலத்தை கூட விட்டுத்தரக்கூடாது - உக்ரைன் நாடாளுமன்றத்தில் போலந்து அதிபர் பேச்சு
x
தினத்தந்தி 22 May 2022 11:33 PM GMT (Updated: 2022-05-23T16:53:11+05:30)

உக்ரைன் நாடாளுமன்றத்தில் பேசிய போலந்து அதிபர், உக்ரைன் ஒரு அங்குல நிலத்தைக் கூட விட்டு கொடுத்து விடக்கூடாது என வலியுறுத்தினார்.

கீவ்,

உக்ரைன் போரில் மரியுபோல் நகரம் முழுவதும் ரஷிய படைகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. அங்குள்ள அஜோவ் உருக்காலையை பாதுகாத்த உக்ரைன் படையினர் 2,500 பேர் ரஷிய படைகளிடம் சரண் அடைந்து விட்டனர்.

அவர்களில் ரஷிய தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு, எஞ்சியவர்கள் ரஷிய கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதியில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த 2,500 பேர் கதி என்ன ஆகப்போகிறது என்பதில் நிச்சயமற்ற நிலை நீடிக்கிறது. அவர்களுக்கு கைதிகளுக்கான உரிமைகளை வழங்க வேண்டும், உக்ரைனுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் உக்ரைனுக்கு திரும்பக்கொண்டு வர போராடுவோம் என உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரேசுக் கூறினார்.

கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷிய படைகள் தாக்குதல்களை நேற்று தீவிரப்படுத்தின.

அங்கு நிலைமை மிகக்கடுமையாக உள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் உக்ரைன் படையினர் ரஷிய படையினரின் தாக்குதல் திட்டங்களில் இருந்து விலகி, அவற்றை சீர்குலைத்து வருவதாகவும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறினார்.

கிழக்கு உக்ரைனில் டான்பாஸ் பிராந்தியத்திலும், தெற்கின் மைகோலெய்வ் நகரிலும் ரஷிய படைகள் வான்தாக்குதலையும், பீரங்கி தாக்குதலையும் நடத்தி வருகின்றன.

இதில் உக்ரைன் படைகளின் கட்டளை மையங்கள், துருப்புகள், வெடிபொருள் கிடங்குகள் இலக்காக வைக்கப்படுகின்றன.

ஏவுகணை தாக்குதலில் 3 கட்டளை மையங்கள், உக்ரைன் துருப்புகளும் தளவாடங்களும் குவிக்கப்பட்டுள்ள 13 பகுதிகள் சேதம் அடைந்துள்ளதாக ரஷிய ராணுவ செய்தி தொடர்பாளர் இகோர் கோனஷென்கோ தெரிவித்துள்ளார்.

மைக்கோலெய்வ் நகரில் ராக்கெட்டுகள் வீசப்பட்டன. இதில் மொபைல் டிரோன் தடுப்பு அமைப்பு பலத்த சேதம் அடைந்தது.

உக்ரைனில் ராணுவ சட்டம் ஆகஸ்டு மாதம் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவிடம் நாட்டின் எந்தப் பகுதியையும் ஒப்படைப்பதுடன் தொடர்புடைய போர் நிறுத்தத்துக்கு சம்மதிக்க மாட்டோம் என்று உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.

போலந்து நாட்டின் அதிபர் ஆண்ட்ர்செஜ் துடா உக்ரைன் சென்றுள்ளார். அவர் கீவ் நகரில் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார்.

உக்ரைன் நாடாளுமன்றத்திலும் அவர் உரை ஆற்றினார். அப்போது அவர் தனது எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமை உக்ரைனுக்கு மட்டுமே உண்டு என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், "ரஷிய அதிபருக்கு உக்ரைன் அடிபணிய வேண்டும் என்று கவலைக்குரல்கள் கூறுகின்றன. ஆனால் அந்த குரல்களுக்கு உக்ரைன் செவிசாய்க்கக்கூடாது. ஏனென்றால் உக்ரைனின் ஒரு அங்குல நிலத்தை விட்டுக்கொடுத்தாலும் அது ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளுக்கு விழுகிற அடியாக அமையும்" என குறிப்பிட்டார்.

Live Updates

 • உக்ரைன் போர்க்குற்ற விசாரணையில் ரஷிய ராணுவ வீரருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது
  23 May 2022 11:23 AM GMT

  உக்ரைன் போர்க்குற்ற விசாரணையில் ரஷிய ராணுவ வீரருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது

  ரஷியாவின் படையெடுப்புக்குப் பிறகு நடைபெற்ற முதல் போர்க்குற்ற விசாரணையில், உக்ரேனிய குடிமகனைக் கொன்றதற்காக 21 வயதான ரஷிய வீரர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உக்ரைனிய நீதிமன்றம் திங்களன்று தீர்ப்பளித்தது.

  வடகிழக்கு சுமி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் உக்ரேனிய குடிமகன் ஒருவரை தலையில் சுட்டுக் கொன்றதாக வாடிம் ஷிஷிமரின் மீது குற்றம் சாட்டப்பட்டது.குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர், அந்த நபரை சுட்டுக் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

 • 23 May 2022 8:24 AM GMT

  ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், உக்ரைனில் ரஷியா ற்கொண்ட காட்டுமிராண்டித்தனத்திற்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளால் விதிக்கப்பட்ட தடைகளின் அடிப்படையில் " "நீண்ட கால விலையை" கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு ரஷியா 'நீண்ட கால விலையை' கொடுக்க வேண்டும் - பிடன்

 • 23 May 2022 5:05 AM GMT

  ரஷியா மரியுபோல் எஃகு ஆலையைசுற்றி புதைக்கபட்டு இருந்த கண்ணிவெடிகள் அகற்றம்

  ரஷியா மரியுபோல் எஃகு ஆலையை நான்கு மாத முற்றுகைக்கு பிறகு கைப்பற்றியதாகக் கூறியது.தற்போது ரஷிய வீரர்கள் உக்ரைனின் அசோவ்ஸ்டலில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த கண்ணிவெடிகளை அகற்றத் தொடங்கி உள்ளனர்.

 • 23 May 2022 12:06 AM GMT

  ரஷிய போர் சின்னங்களுக்கு உக்ரைன் நாடாளுமன்றம் தடை விதித்துள்ளது.

  உக்ரைனில் அதன் போரை ஊக்குவிக்க ரஷிய இராணுவம் பயன்படுத்திய Z" மற்றும் "V" சின்னங்களுக்கு உக்ரைன் நாடாளுமன்றம் தடை விதித்தது, ஆனால் கல்வி அல்லது வரலாற்று நோக்கங்களுக்காக அவற்றைப் பயன்படுத்த அனுமதிக்கும் என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் அழைப்புக்கு ஒப்புக்கொண்டது.

 • 23 May 2022 12:03 AM GMT

  உக்ரைனுக்கு உணவு, மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குவதற்கும், அந்நாட்டிற்கான உலக நாடுகளின் ஏற்றுமதியை உறுதி செய்வதையும் இங்கிலாந்து பிரதமர் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

 • 23 May 2022 12:01 AM GMT

  பிரெஞ்சு ஐரோப்பிய விவகாரத்துறை மந்திரி கிளெமென்ட் பியூன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், நாம் நேர்மையாக இருக்க வேண்டும். இன்னும் ஆறு மாதங்களில் அல்லது ஓரிரு ஆண்டுகளில் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரப் போகிறது என்று நீங்கள் சொன்னால், நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்று அர்த்தம். உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வது என்பது இன்னும் 15 அல்லது 20 ஆண்டுகளில் நிகழலாம்’ என்று அவர் கூறினார். 

 • 22 May 2022 11:59 PM GMT

  உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அந்நாட்டு டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், போர் தொடர்பாக உக்ரைன், ரஷியா இடையேயான பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் பேச்சுவார்த்தை மூலம்தான் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும். போர்க்களத்தில் உக்ரைன் வெற்றி பெற்றாலும், பேச்சுவார்த்தைக்குப் பின்னரே போர் செயல்பாடுகள் முடிவுக்கு வரும் என தெரிவித்தார்.


Next Story