உலகின் அதிநவீன தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணு நிறுவனத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்..!


உலகின் அதிநவீன தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணு நிறுவனத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்..!
x
தினத்தந்தி 30 May 2023 7:27 AM GMT (Updated: 30 May 2023 8:10 AM GMT)

உலகின் அதிநவீன தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணு நிறுவனத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.


டோக்கியோ,

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த 23ந்தேதி 9 நாட்கள் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று ஜப்பானின் டோக்கியோ நகரில் ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் உடன் முதல்-அமைச்சர் சந்தித்து பேசினார். மொத்தம் ரூ.818 கோடியே 90 லட்சம் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், டோக்கியோவில் உள்ள உலகின் அதிநவீன தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணு நிறுவனத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) பார்வையிட்டார். என்இசி பியூச்சர் கிரியேஷன் ஹப் (NEC Future Creation ஹப்)-க்கு நேரில் சென்று முதல்-அமைச்சர் பார்வையிட்டு, அங்குள்ள நவீன தொழில்நுட்ப வசதிகள் பற்றி கேட்டறிந்தார். மேலும் பொது பயன்பாட்டு வசதிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினை பயன்படுத்துவது குறித்தும், தமிழ்நாட்டிற்கான முக அங்கீகார செயற்கை நுண்ணறிவு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிறுவனத்திற்கு சென்று பார்வையிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, விமான நிலையங்களில் மின்னணு சுங்க அறிவிப்பு வாயில் மூலமாக முக அங்கீகார தொழில்நுட்பம், வேகமான சுங்க அனுமதி, நெரிசலற்ற சுங்க ஆய்வு தளங்கள், காத்திருப்பு நேரத்தை குறைத்தல் ஆகிய மனஅழுத்தம் இல்லாத விமான பயணத்தை மேற்கொள்வதற்கான நடைமுறை வழிமுறைகள் குறித்து மைய அதிகாரிகள் விளக்கினார்கள். இந்த அதிநவீன விமான பயண முறை உலகின் பரபரப்பான விமான நிலையமான அட்லாண்டா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விமான நிலையங்களிலும் செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தனர்.

துறைமுக கண்காணிப்பு, தொழிற்சாலை மேலாண்மை, ரெயில் போக்குவரத்து மேலாண்மை தொடர்பு, சாலை போக்குவரத்து மேலாண்மை, தீயணைப்பு அமைப்புகள், தகவல் தொடர்பு அமைப்புகள், விமான போக்குவரத்து கட்டுப்பாடு, வங்கி ஏடிஎம்கள், டிஜிட்டல் தொலைக்காட்சி பரிமாற்றம், மின்னணு அரசாங்கம், நீர் மேலாண்மை, செயற்கைக்கோள் தகவல் தொடர்பு போன்ற கடல் முதல் விண்வெளி வரை அனைத்து நிர்வாகத்திலும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தீர்வு கண்டு வருவது பற்றி முதல்-அமைச்சர் மு.கஸ்டாலினிடம் விளக்கப்பட்டது.

என்இசி பியூச்சர் கிரியேஷன் ஹப் மையமானது, சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு வசதியாக, ஊடாடும் உரையாடல்கள் மற்றும் நேரடி அனுபவங்கள் மூலம் தொழில்நுட்பமும் வணிகமும் ஒன்றிணையும் இடமாகும். இந்த நிறுவனம் சமூகப் பிரச்னைகளைத் தீர்க்கும் தொழில்நுட்பத்தை உருவாக்குவது முதல், செயற்கை நுண்ணறிவு மற்றும் பயோமெட்ரிக் அங்கீகார தொழில்நுட்பங்களின் வளர்ச்சி வரை புதிய மதிப்பை உருவாக்கி வருகிறது.


Next Story