கனடாவில் தீபாவளி கொண்டாடிய இந்தியர்கள் மீது காலிஸ்தான் ஆதரவு கும்பல் தாக்குதல்!


கனடாவில் தீபாவளி கொண்டாடிய இந்தியர்கள் மீது காலிஸ்தான் ஆதரவு கும்பல் தாக்குதல்!
x

கனடாவில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது 400 முதல் 500 பேர் வரை மோதிக் கொண்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

ஒட்டாவா,

கனடாவின் மிசிசாகா நகரில் திங்கள்கிழமை மாலை தீபாவளி கொண்டாட்டத்தின் போது 400 முதல் 500 பேர் வரை மோதிக் கொண்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

மிசிசாகா நகரில் மால்டன் பகுதியில் உள்ள ஷாப்பிங் மாலில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் சண்டையிட்டுக் கொண்டனர் என்று தங்களுக்கு தகவல் கிடைத்ததாக போலீசார் கூறினர். அங்கு இந்தியர்கள் பட்டாசுகள் வெடித்து தீபாவளியை கொண்டாடிக் கொண்டிருந்தபோது காலிஸ்தான் ஆதரவு கும்பல் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இதன கண்ட போலீஸ் அதிகாரிகள், கூட்டத்தில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். அந்த கூட்டத்தில், ஒரு குழுவினர் இந்திய கொடிகளை வைத்திருந்தனர், மற்றொரு கும்பல், காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தை ஆதரிக்கும் பதாகைகளை வைத்திருந்தது.

எனினும், இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீசார் கூறினர்.

பஞ்சாப் மாநிலத்தை தனிநாடாக அறிவிக்க வேண்டுமென சீக்கிய பயங்கரவாதிகளின் காலிஸ்தான் அமைப்பு போராடி வருகிறது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நீதிக்கான சீக்கியர்கள் என்ற அமைப்பு காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது.

இந்த நிலையில் இந்த அமைப்பு பஞ்சாப்பை தனிநாடாக அறிவிப்பது தொடர்பாக கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் கடந்த மாதம் 18-ந்தேதி பொது வாக்கெடுப்பு நடத்தியது. இதை இந்தியா வன்மையாக கண்டித்தது. இந்த நிலையில் 2-ம் கட்டமாக அடுத்த மாதம் (நவம்பர்) 6-ந்தேதி மீண்டும் பொதுவாக்கெடுப்பு நடத்த உள்ளதாக நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு அறிவித்துள்ளது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


Next Story