உக்ரைனுக்கு ரூ.4335.53 கோடி ராணுவ நிதியுதவி; அமெரிக்கா அறிவிப்பு


உக்ரைனுக்கு ரூ.4335.53 கோடி ராணுவ நிதியுதவி; அமெரிக்கா அறிவிப்பு
x

போரால் பாதிக்கப்பட்டு உள்ள உக்ரைனுக்கு ரூ.4335.53 கோடி ராணுவ நிதியுதவி வழங்கப்படும் என அமெரிக்கா அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.



வாஷிங்டன்,



நேட்டோவில் உறுப்பினராக உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா படையெடுத்து உள்ளது. போரானது கடந்த பிப்ரவரி 24ந்தேதி தொடங்கி 5 மாதங்களையும் கடந்து நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இரு நாடுகளும் தீவிர போரில் ஈடுபட்டு உள்ளன.

போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா ராணுவ தளவாடங்கள் மற்றும் நிதி உதவி ஆகியவற்றை செய்து வருகிறது. போரால், உக்ரைனில் உள்ள பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. நேட்டோவில் உக்ரைன் உறுப்பினர் அல்லாத நிலையில், பிற நேட்டோ நாடுகள் போரில் நேரடியாக இறங்க முடியாத நிலையில், அமெரிக்கா ஆயுத சப்ளை செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, உக்ரைனுக்கு ரூ.4335.53 கோடி ராணுவ நிதியுதவி வழங்கப்படும் என அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கன் அறிவித்து உள்ளார்.

உக்ரைனின் சுய பாதுகாப்பிற்காக 2021ம் ஆண்டு ஆகஸ்டில் இருந்து அமெரிக்காவின் பாதுகாப்பு துறை சார்பில் வழங்கப்பட்டு வரும் 17வது நிதியுதவிக்கு அதிபர் பைடன் ஒப்புதலுடன், இதனை அங்கீகரிக்கிறேன் என பிளிங்கன் தெரிவித்து உள்ளார்.

இதன்படி, அதிக செயல்திறன் கொண்ட ராக்கெட் சாதனங்கள் மற்றும் பீரங்கி சாதனங்கள் உள்ளிட்ட கூடுதல் ஆயுதங்களை, உக்ரைன் போரில் பயன்படுத்தி கொள்ள வழங்குகிறோம் என்றும் அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

அதிபர் பைடன் பொறுப்பேற்றது முதல், இதுவரை மொத்தம் உக்ரைனுக்கு ரூ.68 ஆயிரத்து 580 கோடி மதிப்பில் ராணுவ உதவி வழங்கப்பட்டு உள்ளது என்றும் பிளிங்கன் தெரிவித்து உள்ளார்.

இதுபோன்று, ரஷிய போர் தொடங்குவதற்கு முன்பிருந்தே, ஆயுத சப்ளையில் அமெரிக்கா ஈடுபட்டு வரும் சூழலில், ரஷியாவின் முடிவுகள் அமல்படுத்தப்படும் என புதின் தலைமையிலான அரசும் வலியுறுத்தி கூறி வருகிறது.


Next Story