#லைவ் அப்டேட்ஸ்: மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்கள் இருந்த கிடங்கு அழிப்பு -ரஷியா தகவல்


#லைவ் அப்டேட்ஸ்: மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்கள் இருந்த கிடங்கு அழிப்பு -ரஷியா தகவல்
x

Image Courtacy: AFP

தினத்தந்தி 13 Jun 2022 9:24 PM GMT (Updated: 14 Jun 2022 1:48 PM GMT)

உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஆயுதங்கள் இருந்த கிடங்கை தாக்கி அழித்துவிட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது.


Live Updates

  • 14 Jun 2022 1:48 PM GMT

    சமீபத்திய வாரங்களில் கிழக்கு உக்ரைனில் நடந்த சண்டையின் முக்கிய மையமான சீவிரோடோனெட்ஸ்க், நகரின் 80% கட்டுப்பாட்டில் இருந்தாலும் ரஷ்ய வீரர்களால் இன்னும் முழுவதுமாக கட்டுக்குள் கொண்டுவரமுடியவில்லை. நகரில் இருந்து வெளியேறும் மூன்று பாலங்களும் அழிக்கப்பட்டுள்ளதாக ஒரு அதிகாரி செவ்வாயன்று தெரிவித்தார். 

  • 14 Jun 2022 11:34 AM GMT

    புச்சாவில் நடைபெற்ற அப்பாவி மக்கள் படுகொலை குறித்து உக்ரைன் விசாரணை

    உக்ரைன் தலைநகர் கீவ் புறநகர்ப் பகுதியான புச்சா அருகே கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஏழு பொதுமக்களின் சடலம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக உக்ரைன் அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

    முன்னர் ரஷிய கட்டுப்பாட்டுக்குள் இருந்த மைரோட்ஸ்கே கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியில், நடைபெற்ற விசாரணையின் போது, “துப்பாக்கி சூட்டு காயங்கள் மற்றும் கைகளுக்கு பின்னால் கட்டப்பட்ட நிலையில், ஏழு பொதுமக்களின் உடல்கள் அகழிகளில் கண்டுபிடிக்கப்பட்டன" என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து, அந்த ஏழு பொதுமக்களின் சடலம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக உக்ரைன் அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

  • உக்ரைன் போர் சிவிரோடொனெட்ஸ்க் நகருக்கு செல்லும் அனைத்து பாலங்களும் அழிப்பு கவர்னர் செர்ஹி
    14 Jun 2022 5:40 AM GMT

    உக்ரைன் போர் சிவிரோடொனெட்ஸ்க் நகருக்கு செல்லும் அனைத்து பாலங்களும் அழிப்பு கவர்னர் செர்ஹி

    உக்ரைனில் போர் நடந்து வரும் கிழக்கத்திய நகரான சிவிரோடொனெட்ஸ்க்கிற்கு செல்ல கூடிய அனைத்து பாலங்களும் ரஷிய படைகளின் ஆக்ரோஷ தாக்குதலில் அழிக்கப்பட்டு விட்டன.

    இதனை கவர்னர் செர்ஹி கைடாய் சமூக ஊடகம் வழியே வெளியிட்டு உள்ள செய்தியில் உறுதிப்படுத்தி உள்ளார். நகரை முழு கட்டுப்பாட்டுக்குள் ரஷியா இன்னும் எடுத்து கொள்ளவில்லை. அதன் ஒரு பகுதி இன்னும் உக்ரைன் கட்டுக்குள்ளேயே உள்ளது என அவர் கூறியுள்ளார்.

    எனினும், நகரின் 70 சதவீதத்திற்கும் கூடுதலான பகுதிகளை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன.

    இந்நிலையில், பின்லாந்து அதிபர் சாவ்லி நீனிஸ்டோ கூறும்போது, உக்ரைன் மற்றும் ரஷியா என இரு நாடுகளும் போரில் சக்தி வாய்ந்த ஆயுதங்களை பயன்படுத்தி வருகின்றன.

    அதிலும், உக்ரைனுக்கு எதிரான போரில் பேரழிவுகளை ஏற்படுத்த கூடிய தெர்மோபேரிக் குண்டுகள், கிளஸ்டர் வெடிகுண்டுகளை ரஷியா பயன்படுத்தி வருகிறது என கூறியுள்ளார்.

  • 14 Jun 2022 12:31 AM GMT


    செவிரோடொனெட்ஸ்க் நகரில் நடைபெறும் போரால் மனித பலி எண்ணிக்கை உயரக்கூடும் - ஜெலெனஸ்கி

    இதுதொடர்பாக உக்ரேனிய மக்களுக்கு தனது தினசரி உரையில் பேசிய உக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷியப் படைகள் மூலோபாய கிழக்கு நகரத்தை கைப்பற்றி வருவதால், செவிரோடொனெட்ஸ்க்கான போர் "பயங்கரமான" பலி எண்ணிக்கையை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

    மேலும் இந்தப் போரின் காரணமாக மனித செலவு எங்களுக்கு மிகவும் அதிகம் என்றும் டான்பாசுக்கான போர் சந்தேகத்திற்கு இடமின்றி ஐரோப்பாவின் ராணுவ வரலாற்றில் மிகவும் வன்முறையான போர்களில் ஒன்றாக நினைவுகூரப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

  • 14 Jun 2022 12:06 AM GMT


    உக்ரைன் போர் தொடர்ந்து உக்கிரமடைந்து வரும் நிலையில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் மற்றும் இத்தாலி பிரதமர் மரியோ டிராகி ஆகியோர் வருகிற 16-ந்தேதி உக்ரைன் தலைநகர் கீவுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    3 ஐரோப்பிய தலைவர்களும் ஜெலென்ஸ்கியை நேரில் சந்தித்து உக்ரைன் துறைமுகங்களில் கண்ணிவெடி அகற்றுதல் மற்றும் தானியங்களை இறக்குமதி செய்வது குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • 13 Jun 2022 10:37 PM GMT


    ஒரு நாளில் 200 வீரர்கள் பலி

    டான்பாஸ் பிராந்தியத்தில் உள்ள முக்கிய தொழில் நகரமான செவிரோடொனெட்ஸ்க் கிட்டத்தட்ட ரஷிய படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது.

    எனினும் செவிரோடொனெட்ஸ்க் நகரின் ஒரு சில பகுதிகளை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் உக்ரைன் வீரர்கள் நகரை முழுமையாக மீட்டெடுக்க ரஷிய படைகளுடன் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர்.

    இதனிடையே செவிரோடொனெட்ஸ்க் நகர் மட்டும் இன்றி ஒட்டுமொத்த டான்பாஸ் பிராந்தியத்தையும் கைப்பற்ற ரஷிய படைகள் தாக்குதல்களை நாளுக்குநாள் தீவிரப்படுத்தி வருகின்றன.

    இதனால் உக்ரைன் ஒரு நாளைக்கு 100 முதல் 200 ராணுவ வீரர்களை இழந்து வருவதாக அந்த நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் கூறினார்.

  • 13 Jun 2022 9:42 PM GMT


    உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி போரை தொடங்கிய ரஷியா தலைநகர் கீவ் மற்றும் நாட்டின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கிவ்வை கைப்பற்ற தீவிரமாக முயற்சித்தது.

    ஆனால் சரியான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தால் ரஷிய படைகளின் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அதை தொடர்ந்து ரஷியா தனது கவனத்தை கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பிராந்தியம் மீது திருப்பியது. முந்தைய தவறான செயல்களில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட ரஷிய படைகள் டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றுவதில் துல்லியமான தாக்குதல் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

  • 13 Jun 2022 9:25 PM GMT


    டான்பாஸ் பிராந்தியத்தில் உள்ள உக்ரைனின் ஆயுத கிடங்கை நவீன ஏவுகணைகள் மூலம் தாக்கி அழித்ததாக ரஷியா தெரிவித்துள்ளது.

    இந்த கிடங்கில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஆயுதங்கள் இருந்ததாகவும், அவை அனைத்தும் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாகவும் ரஷியா தெரிவித்துள்ளது. எனினும் உக்ரைன் இதனை உறுதிப்படுத்தவில்லை.


Next Story