ரஷிய தாக்குதலில் உக்ரைன் வீரர்கள் 220 பேர் கொன்று குவிப்பு


ரஷிய தாக்குதலில் உக்ரைன் வீரர்கள் 220 பேர் கொன்று குவிப்பு
x

கோப்புப்படம்

ரஷிய தாக்குதலில் உக்ரைன் வீரர்கள் 220 பேர் கொன்று குவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாஸ்கோ,

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா 8 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. இதில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் ரஷிய படைகள் வசம் சென்றுள்ளன. அப்படி ரஷிய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் 4 பிராந்தியங்களை ரஷியா சமீபத்தில் தன்னுடன் இணைத்து கொண்டது. இதனால் கோபமடைந்துள்ள உக்ரைன் ராணுவம் ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்டெடுக்க ரஷிய படைகளுடன் தீவிரமாக சண்டையிட்டு வருகிறது.

அந்த வகையில் கார்கீவ் பிராந்தியத்தில் ரஷிய படைகள் வசம் உள்ள குப்யான்ஸ்க் நகரை மீட்டெடுக்க உக்ரைன் ராணுவம் முயன்றபோது ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் உக்ரைன் வீரர்கள் 220 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த தகவலை ரஷிய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமைச்சகம் வௌியிட்டுள்ள அறிக்கையில், "குப்யான்ஸ்க் நகரை கைப்பற்றும் நோக்கில் பெர்ஷோத்ரவ்னேவ் மற்றும் யாஹிட்னே கிராமங்களை நோக்கி எதிரி படைகள் தாக்குதல் நடத்த முயன்றன. ஆனால் உக்ரைனிய துருப்புகளின் அனைத்து தாக்குதல்களும் ரஷிய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டன. 220 வீரர்கள் கொல்லப்பட்டனர். 2 பீரங்கிகள், 5 காலாட்படை சண்டை வாகனங்கள் மற்றும் 4 கார்கள் அழிக்கப்பட்டன" என கூறப்பட்டுள்ளது.


Next Story