உக்ரைனில் இருந்து தானிய ஏற்றுமதி தொடர்பாக ரஷியாவுடன் பேச்சுவார்த்தை - துருக்கி


உக்ரைனில் இருந்து தானிய ஏற்றுமதி தொடர்பாக ரஷியாவுடன் பேச்சுவார்த்தை - துருக்கி
x

உக்ரைனில் இருந்து கோதுமை உள்ளிட்ட தானியங்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது தொடர்பாக, விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என ரஷியாவும், துருக்கியும் தெரிவித்துள்ளன.

மாஸ்கோ,

உக்ரைனில் இருந்து கோதுமை உள்ளிட்ட தானியங்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது தொடர்பாக, விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என ரஷியாவும், துருக்கியும் தெரிவித்துள்ளன.

உக்ரைனில் ஏற்பட்டுள்ள போரால் கருங்கடல் பகுதியை ரஷியா முற்றுகையிட்டுள்ளதால், உக்ரைனில் இருந்து பல கோடி டன் கணக்கான தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. இதனால், உலகளாவிய உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாதுகாப்பான தானிய ஏற்றுமதிக்கான முன்னெடுப்புகளை, ரஷியாவின் கடல்சார் அண்டை நாடான துருக்கி மேற்கொள்ள வேண்டும் என, ஐ.நா. கோரியது. அதன்படி துருக்கி அதிபர் எர்டோகன், ரஷிய அதிபர் புதினிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

அதன் பலனாக, தானிய ஏற்றுமதிக்காக கருங்கடலில் சாத்தியமான பாதுகாப்பு வழித்தடம் அமைப்பது தொடர்பாக, தொடர்ந்து விவாதிக்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகமும், துருக்கி அரசுப் பிரதிநிதியும் தெரிவித்துள்ளனர். அங்காரா, மாஸ்கோ மற்றும் கீவ் இடையே 'ஹாட்லைன்' தொடர்பு ஏற்படுத்துவது குறித்து பேசப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை வெளிக்காட்டும் வகையில், ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் மரியுபோல் துறைமுகத்தில் சிக்கியிருந்த துருக்கி சரக்குக் கப்பல், பாதுகாப்பாக வெளியேறியது. நேட்டோ உறுப்பினராக இருந்தாலும் ரஷியாவுடன் தொடர் நட்புறவுடன் இருந்து வரும் நாடு துருக்கி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், வரும் வாரங்களில் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் ரஷியா, உக்ரைன், துருக்கி மற்றும் ஐ.நா. இடையிலான சந்திப்பு நடைபெறவுள்ளது என்று துருக்கி அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Next Story