தெற்கு உக்ரைன் நகரம் மீது ரஷியா சரமாரி ஏவுகணை வீச்சு


தெற்கு உக்ரைன் நகரம் மீது ரஷியா சரமாரி ஏவுகணை வீச்சு
x

Image Courtacy: AFP

தெற்கு உக்ரைன் நகரம் மீது ரஷிய ராணுவம் சரமாரி ஏவுகணை வீச்சில் ஈடுபட்டது.

கீவ்,

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடுத்து வரும் போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. கிழக்கு உக்ரைனில் தனது ஆதிக்கத்தை விரிவுப்படுத்த ரஷியா தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் கிழக்கு உக்ரைனில் அரசு படைகள் வசம் உள்ள நகரங்கள் மீது இரவு, பகல் பாராமல் ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன ரஷிய படைகள்.

இதனிடையே போர் தொடங்கிய சமயத்தில் தெற்கு உக்ரைனில் ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவிற்கும் அந்த நாட்டின் முக்கிய துறைமுகமான ஒடேசாவிற்கும் இடையே கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மைகோலைவ் நகரை கைப்பற்ற ரஷியா ராணுவம் தீவிரமாக முயிற்சித்தது. ஆனால் அப்போது உக்ரைன் படைகள் அதை முறியடித்தன.

இந்த நிலையில் மைகோலைவ் நகரை கைப்பற்றுவதற்கான முயற்சியில் ரஷிய படைகள் மீண்டும் இறங்கியுள்ளன. அந்த வகையில் நேற்று மைகோலைவ் நகர் மீது ரஷிய படைகள் சரமரியான தாக்குதல்களை தொடுத்தன.

அந்த நகரில் உள்ள மிகப்பெரிய கப்பல் கட்டும் தளம் உள்பட தொழில்துறை கட்டமைப்புகள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளை குறிவைத்து தொடர்ச்சியாக ஏவுகணைகள் வீசப்பட்டன. எனினும் இந்த தாக்குதல்களில் ஏற்பட்ட உயிர் சேதங்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.


Next Story