தாய்லாந்தில் நட்சத்திர மீனுடன் செல்பி... சீன சுற்றுலாவாசிகளுக்கு நேர்ந்த கதி..!!


தாய்லாந்தில் நட்சத்திர மீனுடன் செல்பி... சீன சுற்றுலாவாசிகளுக்கு நேர்ந்த கதி..!!
x
தினத்தந்தி 28 Jun 2023 9:13 AM GMT (Updated: 28 Jun 2023 9:21 AM GMT)

தாய்லாந்து நாட்டில் நட்சத்திர மீனுடன் செல்பி எடுத்த சீன சுற்றுலாவாசிகள் அதனை சமூக ஊடகத்தில் பகிர்ந்து உள்ளனர்.

பாங்காக்,

தாய்லாந்து நாடு சுற்றுலா தலங்களுக்கு புகழ் பெற்றது. ஆண்டுதோறும் அந்நாட்டில் பெருமளவில் சுற்றுலாவாசிகள் குவிவது வழக்கம். எனினும், அந்நாட்டின் இயற்கை வளங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலான நடவடிக்கைகளில் அந்நாடு கவனம் செலுத்தி வருகிறது.

அந்நாட்டின் கோ ரச்சா யாய் மற்றும் கோ ரச்சா நொய் என இரு தீவுகள் கடல்வாழ் உயிரினங்கள் அதிகம் வசிக்க கூடிய பகுதிகளாகும். அந்நாட்டின் பவள பாறைகள் மற்றும் அழிய கூடிய சூழலில் உள்ள கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பதற்கான நோக்கில் புதிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், சன்யாங் குவின் மற்றும் வென் ஜாங் ஆகிய சீன நாட்டினர் 2 பேர் அந்நாட்டுக்கு சுற்றுலாவுக்கு சென்று உள்ளனர்.

அவர்கள் கோ ரச்சா யாய் என்ற தீவில் கடலில் மூழ்கி, குளித்து மகிழ்ந்து உள்ளனர். அப்போது, அவர்கள் நட்சத்திர மீன்களை கைகளில் பிடித்தும், அவற்றுடன் ஒன்றாக செல்பி புகைப்படம் எடுத்தும் உள்ளனர் என கூறப்படுகிறது. அவர்கள் பவள பாறை மீது ஏறி நடந்து சென்றும் உள்ளனர்.

இதன்பின்னர், அவர்கள் தங்களது புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு உள்ளனர். இதுபோன்ற செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ள சூழலில், இந்த சம்பவம் பற்றி கடல்வாழ் பாதுகாப்பு அதிகாரிகள் போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து, அவர்கள் இருவரும் போலீசாரால் விசாரிக்கப்பட்டனர். அப்போது செய்த தவறை அவர்கள் ஒப்பு கொண்டனர். இதனையடுத்து, அவர்கள் இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. அவர்கள் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இதனை பாங்காங் போஸ்ட் தெரிவித்து உள்ளது.


Next Story