தலீபான் கொடியுடன் ஐ.நா அதிகாரிகள் புகைப்படம்; ஐ.நா. மன்னிப்பு கேட்டது


தலீபான் கொடியுடன் ஐ.நா அதிகாரிகள் புகைப்படம்; ஐ.நா. மன்னிப்பு கேட்டது
x

ஐ.நா. அதிகாரிகள் சிலர் தலீபான் கொடிக்கு முன்னால் நின்று புகைப்படம் எடுத்து அதை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 1½ ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் தலீபான்கள் பெண்கள் கல்வி கற்க, வேலைக்கு செல்ல, தனியாக பயணம் செய்ய என பல்வேறு தடைகளை விதித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே தலீபான்களை கண்டித்து வரும் ஐ.நா. பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் இதுதொடர்பாக தலீபான் அரசின் அதிகாரிகளை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஐ.நா. துணை பொதுச் செயலாளர் அமீனா முகமது தலைமையிலான அதிகாரிகள் குழு 4 நாள் பயணமாக நேற்றுமுன்தினம் ஆப்கானிஸ்தான் சென்றது.

காந்தஹார் நகரில் தலீபான் அரசு அதிகாரிகளை சந்தித்த ஐ.நா. குழு பெண்களுக்கு கல்வி உள்ளிட்ட உரிமைகள் மறுக்கப்படுவதின் அபாயங்களை எடுத்துரைத்தனர்.

இந்த சந்திப்பின் இடையே ஐ.நா. அதிகாரிகள் சிலர் தலீபான் கொடிக்கு முன்னால் நின்று புகைப்படம் எடுத்து அதை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்த நிலையில் இந்த சம்பவத்துக்கு ஐ.நா. மன்னிப்பு கேட்டுள்ளது. இது குறித்து ஐ.நா. பொதுச்செயலாளரின் துணை செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறுகையில், "இந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கவே கூடாது. அதிகாரிகள் மிகுந்த கவனக்குறைவாக இருந்தது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. இது தவறானது. இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவர்களின் மேற்பார்வையாளர்கள் இதுபற்றி பேசியதாக தெரிகிறது" என்றார்.


Next Story