தைவான் மீது போரை தொடங்க தயங்க மாட்டோம்: அமெரிக்காவுக்கு, சீனா எச்சரிக்கை


தைவான் மீது போரை தொடங்க தயங்க மாட்டோம்: அமெரிக்காவுக்கு, சீனா எச்சரிக்கை
x

தைவானை சீனாவிடமிருந்து பிரிக்க எந்த நாடாவது நினைத்தால், அதனை எதிா்த்து போா் தொடங்கவும் தயங்கப் போவதில்லை என்று அமெரிக்காவிடம் சீனா எச்சரித்துள்ளது.

சிங்கப்பூர்,

தைவான், சீனா இடையே பதற்றம்

1949-ல் நடந்த உள்நாட்டு போரின்போது சீனாவும் தைவானும் பிரிந்தன. ஆனால், தைவான் தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடா்ந்து கூறி வருகிறது.அதுமட்டுமின்றி, அவசியம் ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என சீனா மிரட்டி வருகிறது. இதன் காரணமாக தைவான், சீனா இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

சீனாவுக்கு பகிரங்க எச்சரிக்கை

இதனிடையே இந்த விவகாரத்தில் தைவானுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா, தைவான் தன்னை தற்காத்துக்கொள்ள ஆயுதங்களை வழங்கி வருகிறது. இதற்கு சீனா கடுமையாக எதிர்த்து வருகிறது.

இந்த சூழலில் தைவானை, சீனா ஆக்கிரமிக்க நினைத்தால் அமெரிக்கா ராணுவம் அதில் தலையிட்டு தைவானை பாதுகாக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அண்மையில் சீனாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்.

ராணுவ மந்திரிகள் சந்திப்பு

அதை தொடர்ந்து அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீன ராணுவம் தைவான் எல்லையில் அடிக்கடி போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் இருநாடுகளின் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இத்தகைய பரபரப்பான சூழலில் அமெரிக்க ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டினும், சீன ராணுவ மந்திரி வெய் பெங்கேவும் நேற்று முன்தினம் முதல் முறையாக நேரில் சந்தித்து பேசினா்.

எந்த விலை கொடுக்கவும்...

சிங்கப்பூரில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது தைவானை சீனாவிடமிருந்து பிரிக்க எந்த நாடாவது நினைத்தால், அதனை எதிா்த்து போா் தொடங்கவும் தயங்க போவதில்லை என்று லாயிட் ஆஸ்டினிடம் வெய் பெங்கே கூறினார்.

இது குறித்து அவர் கூறுகையில், "தைவானை சீனாவில் இருந்து பிரிக்க யாராவது துணிந்தால், போரை தொடங்க சீன ராணுவம் தயங்காது. அதற்காக எந்த விலை கொடுக்கவும் சீனா தயாராக இருக்கிறது" என்றார்.

அமெரிக்காவின் ஆதரவு தொடரும்

தொடர்ந்து அவர் பேசுகையில், "சீனா 'தைவான் சுதந்திரம்' என்ற சதியை முறியடித்து, தாய்நாட்டின் ஒருங்கிணைப்பை உறுதியுடன் நிலைநிறுத்தும். தைவான் எப்போதும் சீனாவின் தைவான்தான். சீனாவைக் கட்டுப்படுத்த தைவானைப் பயன்படுத்தும் எண்ணம் ஒருபோதும் வெற்றிபெறாது" என கூறினார்.

அப்போது, "தைவான் மீதான ஸ்திரத்தன்மையை மேலும் சீர்குலைக்கும் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும்" என வலியுறுத்திய லாயிட் ஆஸ்டின் தைவானுக்கான அமெரிக்காவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.


Next Story