காலநிலை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் 'விண்வெளி சுற்றுலா' - ஆய்வில் தகவல்


காலநிலை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் விண்வெளி சுற்றுலா - ஆய்வில் தகவல்
x

காலநிலை மாற்றத்தில் ‘விண்வெளி சுற்றுலா’ மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

லண்டன்,

பூமியின் ஈர்ப்பு விசையை தாண்டி விண்வெளிக்குச் சென்று வர வேண்டும் என்ற ஆசை பலருக்கு இருந்தாலும், விண்வெளி பயணம் என்பது அவ்வளவு எளிதான பயணம் அல்ல. பெரும்பாலும் பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்கள் மட்டுமே விண்வெளிக்கு சென்று வர முடியும். இதனை சாமானியர்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத நிலை இருந்து வருகிறது.

ஆனால் அத்தகைய நிலையை சில தனியார் நிறுவனங்கள் படிப்படியாக மாற்றி வருகின்றன. சாமானியர்களின் விண்வெளி கனவை நனவாக்க 'விண்வெளி சுற்றுலா' என்ற பெயரில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான பணிகளில் விர்ஜின் காலக்டிக், ப்ளூ ஆரிஜின், ஸ்பேஸ்-எக்ஸ் போன்ற நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

இருப்பினும் இப்போதைக்கு பணம் படைத்த செல்வந்தர்கள் மட்டுமே செல்லக்கூடிய சுற்றுலாவாக 'விண்வெளி சுற்றுலா' உள்ளது. ஆனால் வரும் நாட்களில் அதற்கான கட்டணங்கள் மேலும் குறையலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் மசாசூசெட்ஸ் கல்விக் கூட ஆராய்ச்சியாளர்கள் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ராக்கெட்டுகள் வெளியிடும் கார்பன் துகள்கள் காலநிலை மாற்றத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும், இதனால் வளிமண்டலத்தில் வெப்பம் அதிகரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2019-ம் ஆண்டு உலக அளவில் ஏவப்பட்ட 103 ராக்கெட்டுகளால் ஏற்பட்ட தாக்கத்தின் அடிப்படையில் இந்த ஆய்வை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் 'விண்வெளி சுற்றுலா' தொழிலில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் வருங்கால திட்டங்களால் மேலும் பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்போதைக்கு ராக்கெட் ஏவுதல் மூலம் ஓசோன் படலத்தில் ஒரு சிறிய அளவு தான் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும். ஆனால் வரும் நாட்களில் விண்வெளி சுற்றுலா அதிகரிக்கும் போது ஓசோன் படலத்திற்கு நிச்சயம் பாதிப்புகள் இருக்கும் எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மேலும் சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்த உடனடியாக அதற்கான நடைமுறைகளை விண்வெளி சார்ந்த தொழில் துறை முன்னெடுக்க வேண்டும் எனவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story