ராணுவத்துக்கு எதிரான பேச்சு... பாகிஸ்தான் முன்னாள் மந்திரியின் மகளை இரவு உடையில் தரதரவென இழுத்து சென்ற போலீசார்


ராணுவத்துக்கு எதிரான பேச்சு... பாகிஸ்தான் முன்னாள் மந்திரியின் மகளை இரவு உடையில் தரதரவென இழுத்து சென்ற போலீசார்
x
தினத்தந்தி 20 Aug 2023 7:34 PM IST (Updated: 20 Aug 2023 8:33 PM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தானில் ராணுவத்துக்கு எதிராக பேசியதற்காக அந்நாட்டின் முன்னாள் மந்திரியின் மகளை இரவு உடையில் தரதரவென போலீசார் இழுத்து சென்றது பரபரப்பு ஏற்படுத்தியது.

லாகூர்,

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் மந்திரியாக இருந்தவர் ஷிரீன் மஜாரி. இவரது மகள் மற்றும் மனித உரிமைகள் அமைப்பின் வழக்கறிஞராக இருப்பவர் இமான் ஜைனப் மஜாரி.

இந்நிலையில், சமூக ஊடக தளங்களில் ஒன்றான எக்ஸ்-ல் (முன்பு டுவிட்டர்) இன்று காலை பதிவொன்றை மஜாரி வெளியிட்டார். அதில், மர்ம நபர்கள் எனது வீட்டின் கேமிராக்களை உடைத்து கொண்டிருக்கின்றனர். கதவுகளை உடைத்தும், அதன் மீது ஏறி, ஓடியும் கொண்டிருக்கின்றனர் என பதிவிட்டார்.

இன்று அதிகாலை 3.50 மணியளவில் பதிவு வெளியான சில மணிநேரங்களில் அவர் கைது செய்யப்பட்டார்.

இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை குழுக்கள் தரப்பில் இருந்து கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த கைது நடவடிக்கையை இஸ்லாமாபாத் போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர்.

அலி வாசீர் மற்றும் இமான் மஜாரி இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவரும் விசாரணைக்காக தேடப்பட்டு வந்தவர்கள். சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

எனினும், விசாரணையில் உள்ள வழக்கு பற்றிய விவரங்களை போலீசார் குறிப்பிடவில்லை.

ஆனால், சமீபத்தில் நடந்த பாஷ்டூன் இயக்கத்தின் பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மஜாரி, ராணுவத்திற்கு எதிரான விமர்சனங்களை வெளியிட்டார் என கூறப்படுகிறது.

முன்னாள் ராணுவ தளபதி காமர் ஜாவித் பஜ்வாவுக்கு எதிராக தகாத வகையில் பேசினார் என மஜாரிக்கு எதிராக குற்ற வழக்கு ஒன்றும் பதிவானது.

இந்நிலையில் மஜாரியின் தாயார் ஷிரீன், இரவு உடையில் இருந்த தனது மகளை வேறு உடை அணிய வேண்டும் என கூறியும் கூட விடாமல், போலீசார் தரதரவென இழுத்து சென்றனர். வாரண்டோ அல்லது சட்ட நடைமுறைகளோ இல்லை.

2 பெண்களான நாங்கள் மட்டுமே வீட்டில் வசிக்கிறோம். இது ஒரு கடத்தல் என குற்றச்சாட்டாக கூறியுள்ளார். தனது மகளின் லேப்டாப் மற்றும் செல்போனையும் அவர்கள் எடுத்து சென்று விட்டனர் என அவர் கூறியுள்ளார்.


Next Story