இலங்கை பொருளாதார நெருக்கடி குறித்து விவாதிக்க ரணில் விக்ரமசிங்கே இந்தியா வர திட்டம்


இலங்கை பொருளாதார நெருக்கடி குறித்து விவாதிக்க  ரணில் விக்ரமசிங்கே இந்தியா வர திட்டம்
x

இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து விவாதிப்பதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வர இருப்பதாக அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கொழும்பு,

இலங்கை, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அன்னிய செலாவணி பற்றாக்குறையால், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியவில்லை. வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடனையும் நிறுத்தி வைத்துள்ளது.

இதற்கிடையே, பொருளாதார சிக்கலில் இருந்து மீள சர்வதேச நிதியத்துடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தியது. இலங்கைக்கு ரூ.23 ஆயிரத்து 200 கோடி கடன் வழங்க சம்மதம் தெரிவித்து சர்வதேச நிதியம் பூர்வாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

ஆனால், இந்த கடனை இறுதி செய்வதற்கு முன்பு, ஏற்கனவே கடன் வாங்கிய நாடுகளுடன் கடனை மறுசீரமைப்பு செய்து கொள்ள வேண்டும் என்றும், அந்த நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் சர்வதேச நிதியம் நிபந்தனை விதித்தது.

இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றிடம் இலங்கை கடன் பெற்றுள்ளது. இதில் இந்த ஆண்டில் அதிக அளவாக இந்தியா 4 பில்லியன் டாலர் அளவுக்கு இலங்கைக்கு உதவி உள்ளது.

ஒட்டுமொத்த அளவில் சீனா (52 சதவீதம்), ஜப்பான் (19 சதவீதம்) நாடுகளுக்கு அடுத்ததாக (12 சதவீதம்) 3-வது இடத்தில் உள்ளது. இந்த கடனை மறுசீரமைப்பு செய்வது குறித்த பேச்சுவார்த்தை ஏற்கனவே நடந்து வருகிறது.

இந்த நிலையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து இந்தியாவுடன் ஆலோசனை நடத்துவதற்காக டெல்லி வர திட்டமிட்டு உள்ளதாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நமது நிலைைமயை விவரிப்பதற்கு டெல்லி வர விரும்புவதாக ஜப்பானில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது நான் தெரிவித்தேன்.

பிரதமர் மோடி எப்போதும் நமக்கு ஆதரவாக இருந்து வருகிறார். நமது நெருக்கடியில் இந்தியாவின் உதவியை நான் எப்போதும் பாராட்டுகிறேன். நமது மறுகட்டமைப்பு முயற்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும்.

சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை தொடங்கி விட்டது. 16-ந் தேதி தொடங்க உள்ள சீன கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டுக்கு பிறகு பேச்சுவார்த்தை தொடரும்.

பழங்காலத்தில் இருந்தே சீனா நமக்கு ஆதரவாக இருக்கிறது. இந்த சிக்கலான நேரத்திலும் ஆதரிக்கும் என்று நம்புகிறேன்.

சமீபத்தில், ஜப்பான் சென்று திரும்பினேன். ஜப்பானும் இதில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கிடையே, இலங்கை அதிபரின் அதிகாரத்தை குறைத்து, நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரங்கள் அளிப்பதற்காக அரசியல் சட்டத்தில் 22-வது திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்தம் குறித்து நேற்றும், இன்றும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால், இந்த விவாதம் நேற்று நடக்கவில்லை. ஆளும் கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனாவில் ஒருதரப்பினர், அந்த திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் தினேஷ் குணவர்த்தனே நேற்று இலங்ைக நாடாளுமன்றத்தில் பேசும்போது, '22-வது அரசியல் சட்ட திருத்தம் குறித்து எதிர்க்கட்சிகளின் கருத்துகளை அறிய இன்னும் ஆலோசனை நடத்த வேண்டி இருக்கிறது. அப்போதுதான், இது அர்த்தமுள்ள நடவடிக்கையாக அமையும். எனவே, இப்போது விவாதம் நடக்காது' என்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவும் இதே கருத்தை கூறினார்.


Next Story