சூயஸ் கால்வாயில் தரைதட்டிய ஹாங்காங் கப்பல் : பெரும் போராட்டத்துக்கு பின்னர் மீட்பு


சூயஸ் கால்வாயில் தரைதட்டிய ஹாங்காங் கப்பல் : பெரும் போராட்டத்துக்கு பின்னர் மீட்பு
x

எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாயில் தரைதட்டிய ஹாங்காங் கப்பல் பெரும் போராட்டத்துக்கு பின்னர் மீட்கப்பட்டது.

கெய்ரோ,

எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாய் என்பது மனிதனால் வெட்டப்பட்ட ஒரு செயற்கையான கால்வாய் ஆகும். இது மத்திய தரைக்கடலையும், செங்கடலையும் கடல் வழியாக இணைக்கிறது. 193 கி.மீ. நீளமும், 300 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கால்வாய் 1869-ம் ஆண்டு திறக்கப்பட்டது.

இதன் மூலம் ஐரோப்பாவுக்கும், ஆசியாவுக்கும் இடையேயான வர்த்தகம் தற்போது எளிதாக நடைபெறுகிறது. ஏனெனில் இந்த கால்வாய் வெட்டப்படுவதற்கு முன்னர் ஆப்பிரிக்காவை சுற்றியே ஆசியாவுக்கு வர வேண்டி இருந்தது. எனவே இந்த கால்வாய் மூலம் 7 ஆயிரம் கிலோ மீட்டர் பயண தூரம் மிச்சமாகி உள்ளது.

சரக்கு போக்குவரத்து

சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இந்த கால்வாய் வழியாக தினந்தோறும் சுமார் 50 கப்பல்களில், 300 மில்லியன் டன்னுக்கும் அதிகமான சரக்குகளை இதன் வழியாக கொண்டு செல்கின்றன. இந்த பாதை வழியாகவே இந்தியா, சீனா ஆசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய், கார் உதிரி பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதில் ஏதேனும் சிக்கல் நிலவினால் அது நமது நாட்டின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இழுவை படகுகள்

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த கால்வாயில் ஹாங்காங் நாட்டின் ஜின் ஹை டோங்-23 என்ற ராட்சத கப்பல் ஒன்று தரைதட்டி நின்றது. இதனால் மற்ற கப்பல்கள் அதன் வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து சூயஸ் கால்வாயின் போக்குவரத்தை கண்காணிக்கும் லெத் நிறுவனம் உடனடியாக இதனை மீட்கும் முயற்சியில் இறங்கியது. அதன்படி 3 இழுவை படகுகள் அனுப்பப்பட்டு பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர் அந்த ஹாங்காங் நாட்டு கப்பல் விடுவிக்கப்பட்டது. அதன்பிறகே அந்த வழியாக மற்ற கப்பல்களும் சென்றன. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் கடந்த 2021-ம் ஆண்டு தைவான் நாட்டின் எவர்கிரீன் கப்பல் தரைதட்டி நின்ற சம்பவம் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


Next Story