நைஜீரியாவில் போலீஸ் நிலையங்கள் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் - 8 போலீஸ் அதிகாரிகள் பலி


நைஜீரியாவில் போலீஸ் நிலையங்கள் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் - 8 போலீஸ் அதிகாரிகள் பலி
x

கோப்புப்படம்

நைஜீரியாவில் போலீஸ் நிலையங்கள் மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 8 போலீஸ் அதிகாரிகள் பலியாகினர்.

அபுஜா,

ஆப்பிரிக்க நாடான நைஜீரியா நீண்டகாலமாக பல்வேறு பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறது. நாட்டின் தென்கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் தனிநாடு கோரி ஆயுதம் ஏந்திய கிளர்ச்சி குழுக்கள் சண்டையிட்டு வரும் வேளையில், வடமேற்கு பிராந்தியங்களில் பல பயங்கரவாத இயக்கங்கள் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் உள்ளிட்ட நாசாவேலைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த சூழலில் வருகிற 25-ந் தேதி நைஜீரியாவில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. தனிநாடு கோரி சண்டையிட்டு வரும் கிளர்ச்சியாளர்கள் தேர்தல் நடவடிக்கைகளை சீர்குலைக்கும் முயற்சிகளில் ஈடுபடலாம் என்கிற அச்சம் நிலவுகிறது. இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நைஜீரியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள அம்பாரா மாகாணத்தில் இருக்கும் 2 போலீஸ் நிலையங்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டது. கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் நடத்திய கொடூர தாக்குதல்களில் 8 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

பியாப்ரா பழங்குடி மக்கள் இயக்கம் என்ற பெயரில் செயல்பட்டு வரும் கிளர்ச்சியாளர்கள் இயக்கம் இந்த கொடூர தாக்குதல்களை நடத்தியதாக போலீசார் குற்றம் சாட்டினர். மேலும் இந்த தாக்குதல்கள் தொடர்பாக 6 பேரை கைது செய்திருப்பதாகவும், தப்பியோடியவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை தொடர்வதாகவும் அவர்கள் கூறினர்.


Next Story