ராணுவ விருந்து நிகழ்ச்சியில் மகளுடன் தோன்றிய வடகொரிய அதிபர்


ராணுவ விருந்து நிகழ்ச்சியில் மகளுடன் தோன்றிய வடகொரிய அதிபர்
x

வடகொரியாவில் 75-வது ஆண்டு ராணுவ நிறுவன நாளில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் அதிபர் கிம் தனது மகளுடன் கலந்து கொண்டது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.



பியாங்யாங்,


அணு ஆயுத நாடுகளில் ஒன்றான வடகொரியா அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சவால் விடும் வகையில், அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி மிரட்டல் ஏற்படுத்தி வருகிறது.

அந்நாட்டில் நடக்க கூடிய பல விசயங்கள் வெளியுலகிற்கு பரவலாக தெரிவதில்லை. அந்நாட்டு சட்ட திட்டங்கள் அதற்கேற்ற வகையில் உள்ளன. அதிபர் கிம் ஜாங் அன்னை பற்றி வெளிவர கூடிய தகவல்கள் தணிக்கை செய்யப்பட்ட வகையிலேயே வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதேபோன்று, கிம்முக்கு பிடிக்காத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு, உயர் பதவியில் அல்லது உயரதிகாரியாக இருந்தபோதும் மரண தண்டனை கூட வழங்கப்படும் சூழல் உள்ளது என்றும் தகவல்கள் வெளிவந்து உள்ளன.

கிம்மின் குடும்பம் பற்றிய தகவலிலும் ரகசியம் காக்கப்பட்டு வருகிறது. கிம்முக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் என மொத்தம் 3 குழந்தைகள் உள்ளனர் என நம்பப்படுகிறது.

இந்த நிலையில், வடகொரியாவில் கொரிய மக்கள் ராணுவம் என்ற பெயரிலான அந்நாட்டு ராணுவ பிரிவு தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆன நிலையில், அதனை கொண்டாடும் வகையில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதில் கலந்து கொள்வதற்காக, அதிபர் கிம் ஜாங் அன் தனது மகளுடன் வருகை தந்து உள்ளார். அவர் கிம்மின் 2-வது மகளான கிம் ஜூ யே என கூறப்படுகிறது. கருப்பு நிற உடையில், மூத்த ராணுவ உயரதிகாரிகள் சூழ்ந்து இருக்க தனது தந்தைக்கு அருகே மகள் ஜூ விருந்து நிகழ்ச்சியில் அமர்ந்து உள்ளார். ராணுவ அதிகாரிகளுடன் கைகுலுக்கிய புகைப்படங்களும் வெளிவந்து உள்ளன.

கடந்த ஆண்டு நவம்பரில் ஏவுகணை சோதனை நிகழ்வின்போது, தனது மகளையும் உடன் அழைத்து சென்ற கிம், அது தொடர்புடைய புகைப்படங்களை முதன்முறையாக உலகிற்கு தெரியப்படுத்தினார். அதில், வெண்ணிறத்தில் கோட் ஒன்று அணிந்தபடி தனது தந்தையின் கைகளை பிடித்தபடி கிம்மின் மகள் நடந்து சென்றார்.

இதனை தொடர்ந்து, அதே நவம்பரில் நடந்த ஏவுகணை விஞ்ஞானிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தின் போதும் தனது மகளுடன் கிம் ஜாங் அன் பங்கேற்றார்.

இதனால், 4-வது தலைமுறையாக பாரம்பரிய முறைப்படி கிம்முக்கு அடுத்து, நாட்டை ஆளும் தலைமை பண்புக்கு அவர் தயாராவார் என்றும் அடுத்த கட்ட தலைவர் தயாராகி வருகிறார் என்றும், அதுவே வடகொரிய மக்களுக்கு தற்போது தேவையான ஒன்றாகவும் உள்ளது என்றும் பரவலாக மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விருந்து நிகழ்ச்சியில் கிம்மின் மனைவி ரி சொல் ஜூவும கலந்து கொண்டார்.


Next Story