'இன்றைய உர தட்டுப்பாடு, நாளைய உணவு தட்டுப்பாட்டிற்கு வித்திடும்': ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு


இன்றைய உர தட்டுப்பாடு, நாளைய உணவு தட்டுப்பாட்டிற்கு வித்திடும்: ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
x

ஜி20 மாநாட்டில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு குறித்த அமர்வில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

பாலி,

ஜி20 மாநாட்டில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு குறித்த அமர்வில் பிரதமர் மோடி உரையாற்றினார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகிய பல தலைவர்கள் அதில் பங்கேற்றனர்.பிரதமர் மோடி ஆற்றிய உரையில் கூறியதாவது:-

கொரோனா பெருந்தொற்றின்போது தனது 1.3 பில்லியன் மக்களுக்கு உணவு பாதுகாப்பை இந்தியா உறுதி செய்தது. அதே நேரத்தில் பல்வேறு நாடுகளுக்கு உணவு தானியங்களும் விநியோகிக்கப்பட்டன.

'இன்றைய உர தட்டுப்பாடு தான், நாளைய உணவு தட்டுப்பாட்டிற்கு வித்திடும்'. இது நடக்கும் போது இதற்கான தீர்வு உலக நாடுகளிடம் இருக்காது.

உரம் மற்றும் உணவு தானியங்களின் விநியோக சங்கிலியை தொடர்ந்து நிலை நிறுத்துவதற்கான பரஸ்பர ஒப்பந்தத்தை நாம் மேம்படுத்த வேண்டும். நிலையான உணவு பாதுகாப்பிற்காக இந்தியாவில் இயற்கை விவசாயத்தை நாங்கள் ஊக்குவிப்பதோடு, சிறு தானியங்கள் போன்ற ஊட்டச்சத்து மிக்க மற்றும் பாரம்பரிய உணவு தானியங்களையும் மக்களிடையே மீண்டும் பிரபலப்படுத்துகிறோம்.

உலகளாவிய ஊட்டச்சத்து குறைபாடு, பசி ஆகிய பிரச்சனைக்கு சிறுதானியங்கள் தீர்வாக அமையலாம். சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக, அடுத்த வருடம் மிகுந்த உற்சாகத்தோடு நாம் அனைவரும் கொண்டாட வேண்டும்.

உலகளவில் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக விளங்கும் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு சர்வதேச வளர்ச்சிக்கு முக்கியம்.எரிசக்தி சந்தையில் ஆற்றல் மற்றும் நிலைத்தன்மையின் விநியோகத்திற்கு எந்த கட்டுப்பாடுகளையும் நாம் ஊக்குவிக்கக் கூடாது. தூய்மையான எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் என்பதில் இந்தியா உறுதி பூண்டுள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


Next Story