ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத தளபதி சுட்டுக்கொலை


ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத தளபதி சுட்டுக்கொலை
x

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத தளபதி உள்பட 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அப்போது முதல் அங்கு கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நிலவி வருகின்றன. ஐ.எஸ். கோரசான் என்று அழைக்கப்படும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றன.

இந்த சூழலில் அண்மை காலமாக ஆப்கானிஸ்தானில் இருக்கும் வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் தூதரக ஊழியர்களை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தலைநகர் காபூலில் உள்ள கைர் கானா பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக தலீபான் அரசின் பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தியபோது, பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதை கண்டறிந்தனர். தொடர்ந்து அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தளபதியான காரி பதே என்பவர் உள்பட 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். காபூலில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த காரி பதே தலைமையிலான குழு சதி திட்டம் தீட்டி வந்ததாகவும், சரியான நேரத்தில் காரி பதே கொல்லப்பட்டது மூலம் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகவும் தலீபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story