துனிசியாவில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 11 பேர் பலி


துனிசியாவில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 11 பேர் பலி
x

உள்நாட்டு போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.

துனிஸ்,

உள்நாட்டு போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பாவை அடைய முற்படுகின்றனர். இதுபோன்ற ஆபத்தான பயணங்கள் பல நேரங்களில் துயரத்தில் முடிந்து விடுகிறது.

இந்த நிலையில் வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் உள்ள ஸ்பாக்ஸ் பிராந்தியத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்ட அகதிகள் படகு ஒன்றில் இத்தாலி நோக்கி புறப்பட்டனர்.

இந்த படகு துனிசியாவின் மஹ்தியா நகருக்கு அருகே மத்திய தரைக்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் துனிசியா கடலோர காவல் படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

எனினும் அதற்குள் பெண்கள், சிறுவர்கள் உள்பட 11 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். நீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 14 பேரை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். மேலும் இந்த விபத்தில் 12 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. இருப்பினும் அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story