துருக்கி: அதிரடி வேட்டையில் ஐ.எஸ். அமைப்பினர் 38 பேர் கைது


துருக்கி: அதிரடி வேட்டையில் ஐ.எஸ். அமைப்பினர் 38 பேர் கைது
x
தினத்தந்தி 29 April 2024 7:38 AM GMT (Updated: 29 April 2024 7:52 AM GMT)

துருக்கி நாட்டில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் என சந்தேகிக்கப்படும் 38 பேரை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.

அங்காரா,

துருக்கி நாட்டில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாத குழுவினர் பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், பொதுமக்கள், போலீசார் என பலரும் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில், ஐ.எஸ். அமைப்பினரை கண்டறிந்து அவர்களை அழிக்கும் நோக்கில் அதிபர் எர்டோகன் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதுபற்றி துருக்கி உள்துறை மந்திரி அலி எர்லிகயா செய்தியாளர்களிடம் கூறும்போது, ஐ.எஸ். அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் போஜ்டாகன்-31 என்ற பெயரில் அடானா, ஆய்டின், கோரம், காசியன்டெப், கேசெரி மற்றும் மெர்சின் ஆகிய மாகாணங்களில் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

இதில், சந்தேகத்திற்குரிய வகையிலான 38 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த சோதனையின்போது, வெளிநாடு மற்றும் துருக்கி நாட்டு கரன்சி நோட்டுகளும் பெரிய அளவில் கைப்பற்றப்பட்டன. சில டிஜிட்டல் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன என தெரிவித்து உள்ளார்.

துருக்கி நாடு, 2013-ம் ஆண்டு முதல் ஐ.எஸ். அமைப்பினரை ஒரு பயங்கரவாத அமைப்பு என அறிவித்து உள்ளது. 2015-ம் ஆண்டு முதல் அந்நாட்டில் நடந்து வரும் கொடூர தாக்குதலுக்கு இந்த அமைப்பே காரணம் என குற்றச்சாட்டும் கூறி வருகிறது.

கடந்த ஜனவரியில், இஸ்தான்புல் நகரில் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயம் ஒன்றின் மீது நடந்த தாக்குதலில் ஒருவர் பலியானார். இதற்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளே காரணம் என்று அரசு அப்போது தெரிவித்து இருந்தது.


Next Story