இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு; திங்கட்கிழமை முடிவுகள் வெளியாகிறது


இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு; திங்கட்கிழமை முடிவுகள் வெளியாகிறது
x
தினத்தந்தி 3 Sep 2022 4:23 PM GMT (Updated: 3 Sep 2022 4:24 PM GMT)

இங்கிலாந்தில் பிரதமர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. திங்கட்கிழமை முடிவுகள் வெளியாக உள்ளன.

லண்டன்,

போரிஸ் ஜான்சன் ராஜினாமா

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா விதிமுறைகளை மீறி பிரதமர் அலுவலகத்தில் மது விருந்து நிகழ்ச்சிகளை நடத்திய விவகாரத்தில் சொந்த கட்சியான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள்ளேயே அவருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் பிரதமர் மற்றும் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதை தொடர்ந்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தொடங்கியது. இங்கிலாந்தின் அரசியலமைப்பு சட்டப்படி ஆளும் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படும் நபரே நாட்டின் பிரதமராக நியமிக்கப்படுவார்.

வாக்கு பதிவு நிறைவடைந்தது

அந்த வகையில் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக்குக்கும், தற்போதைய வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

புதிய தலைவரை தேர்வு செய்ய கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் சுமார் 1.60 லட்சம் பேர் கடந்த சில வாரங்களாக தபால் மற்றும் ஆன்லைன் மூலமாக வாக்களித்து வந்தனர். இந்த வாக்கு பதிவு முன்தினம் மாலையுடன் முடிவடைந்தது. அதை தொடர்ந்து உடனடியாக வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

லிஸ் டிரஸ்சுக்கு வாய்ப்பு

இந்திய நேரப்படி திங்கட்கிழமை மதியம் 12.30 மணியவில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து இறுதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இங்கிலாந்தை ஆளப்போகும் புதிய பிரதமர் யார் என்பது அப்போது தெரிந்துவிடும்.

தேர்தலுக்கு முன்பு நடத்தப்பட்ட பல்வேறு கருத்து கணிப்புகளில் ரிஷி சுனக்கை காட்டிலும், லிஸ் டிரஸ் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார்.

தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளிலும் லிஸ் டிரஸ்சுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்து என்ன நடக்கும்?

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் பிரதமர் போரிஸ் ஜான்சான் மறுநாள் (செவ்வாய்க்கிழமை) ஸ்காட்லாந்துக்கு சென்று அங்கு விடுமுறையை கழித்து வரும் ராணி 2-ம் எலிசபெத்தை நேரில் சந்தித்து முறைப்படி தனது ராஜினாமாவை அறிவிப்பார்.

அதன் பின்னர் அன்றைய தினமே தேர்தலில் வெற்றிப்பெற்ற லிஸ் டிரஸ் அல்லது ரிஷி சுனக் ராணியை சந்தித்து புதிய அரசை அமைக்க அனுமதி கோருவார். ராணி அதை ஏற்றுக்கொண்டு இங்கிலாந்தின் புதிய பிரதமரை நியமனம் செய்வார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் புதிய பிரதமரை நியமிக்கும் விழா நடைபெறும்.

அரச மரபை உடைத்து...

இங்கிலாந்து அரச பாரம்பரிய நடைமுறைகளின்படி புதிய பிரதமரை நியமிக்கும் விழா இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனையில்தான் நடைபெறும்.

ஆனால் தற்போது ராணியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர் பயணம் மேற்கொள்வதை தவிர்க்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளதால் அரச மரபை உடைத்து ஸ்காட்லாந்தில் இந்த விழா நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story