கிரீமியாவில் உள்ள ரஷிய கடற்படை தளம் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல்


கிரீமியாவில் உள்ள ரஷிய கடற்படை தளம் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல்
x

Image Courtesy: Reuters

கிரீமியாவில் உள்ள ரஷிய கடற்படை தளம் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

சிறப்பு ராணுவ நடவடிக்கை

உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் உக்ரைன் சேர முயற்சித்து வருகிறது. ஆனால் இதனால் தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என ரஷியா கருதியது. இதனால் சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது. இந்த போரில் கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் பல பகுதிகளை ரஷியா கைப்பற்றியது. இதனையடுத்து உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார உதவிகளை வழங்கின.

டிரோன் தாக்குதல்

அதன் ஒருபகுதியாக ரூ.2,700 கோடி ராணுவ உதவிகளை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சமீபத்தில் அறிவித்தார். அதேபோல் கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் தொடர்ந்து ராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன. அவற்றின் உதவியால் கடந்த 20 மாதங்களாக ரஷியாவின் தாக்குதலை உக்ரைன் சமாளித்து வருகிறது. மேலும் சமீப காலமாக இரு நாடுகளும் அவ்வப்போது டிரோன் தாக்குதலில் ஈடுபடுகின்றன.

புகைமண்டலம் சூழ்ந்தது

இந்தநிலையில் முன்பு உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரீமியாவை 2014-ம் ஆண்டு ரஷியா கைப்பற்றியது. இங்குள்ள செவாஸ்டபோல் நகரில் ரஷியாவின் கருங்கடல் படைத்தளம் செயல்படுகிறது.

இங்கு உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 5 ஏவுகணைகளை ரஷிய வான்பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். எனினும் இந்த தாக்குதலில் ரஷிய ராணுவ வீரர் ஒருவர் மாயமானதாக பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த தாக்குதலால் ரஷிய கடற்படை தளம் தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து உடனடியாக தீயை அணைத்தனர். இதனால் கடற்படை தளத்தில் புகைமண்டலம் சூழ்ந்தது. இதுகுறித்த காட்சிகள் அங்குள்ள சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.


Next Story