வோக் இதழ் அட்டைப் படங்களில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது மனைவி! - புதிய சர்ச்சை

Image Credit:Vogue
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், அவரது மனைவியும் ‘வோக்’ இதழின் அட்டைப் படங்களில் போஸ் கொடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கீவ்,
உக்ரைன் போர்க் காட்சிகளை உலகிற்கு காண்பிக்கும் வகையில் அதிபர் ஜெலன்ஸ்கியும், அவரது மனைவியும் 'வோக்' இதழின் அட்டைப் படங்களில் போஸ் கொடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் மாதம் வரவுள்ள வோக் இதழ் நேர்காணலில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது மனைவி ஒலனா நேர்காணல் இடம்பெற்றுள்ளது. இதற்கான முன்னோட்ட படங்களை வோக் அதன் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளது.
உக்ரைனின் மீதான ரஷியாவின் படையெடுப்பு 5 மாதங்களை கடந்து நடந்து கொண்டிருக்கிறது. தங்கள் நாட்டில் இனி வாழ முடியாது என்ற நிலையில் வெளிநாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயரும் உக்ரைனியர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்குகிறது. பொருளாதார ரீதியாகவும் உக்ரைன் மிகப் பெரும் இழப்பைச் சந்தித்து இருக்கிறது.
ரஷியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. இந்த நிலையில் பேச்சுவார்த்தைகளை முன் நகர்த்தாமல்உக்ரைன் போர் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது மனைவி ஒலனா ஜெலன்ஸ்கா ஆகிய இருவரிடம் நடத்தப்பட்ட நேர்காணலில், ஒலனா போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிற்கும் புகைப்படங்களையும் வோக் இதழ் வெளியிட்டுள்ளது.
இந்தப் புகைப்படங்கள் தைரியத்தை காட்டுகின்றது என ஒருபக்கம் வரவேற்பு இருக்க, மறுபக்கம் போர் நடக்கும் நேரத்தில் இவை எல்லாம் அவசியமா என்ற எதிர்வினைகளும் எழுந்துள்ளன.