சீன அதிபர் ஜின்பிங்கை சந்திக்க உக்ரைன் அதிபர் திட்டம்


சீன அதிபர் ஜின்பிங்கை சந்திக்க உக்ரைன் அதிபர் திட்டம்
x

சீனாவின் அமைதி திட்டம் குறித்து விவாதிக்க சீனா நாட்டின் அதிபர் ஜின்பிங்கை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன்-ரஷியா போர் ஓர் ஆண்டை கடந்துள்ள நிலையில் உலக நாடுகள் பலவும் போரை முடிவுக்கு கொண்டு இரு தரப்பையும் வலியுறுத்தி வருகின்றன. அந்த வகையில் ரஷியாவின் நெருங்கிய நட்பு நாடான சீனா போரை முடிவுக்கு கொண்டு வரவும், அமைதி பேச்சுவார்த்தையை தொடங்கவும் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. போரில் ரஷியாவுக்கு ஆதரவாக சீனா செயல்பட்டு வருவதாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டி வரும் வேளையில் சீனா போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சீனாவின் அமைதி திட்டம் குறித்து விவாதிக்க அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங்கை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "அமைதிக்கான தேடலில் சீனா ஈடுபட்டுள்ளது என்பதை இந்த திட்டம் சுட்டிக்காட்டுகிறது. சீனாவின் திட்டம் அமைதிப் பேச்சுவார்த்தை மற்றும் தேசிய இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும். ரஷியாவுக்கு சீனா ஆயுதங்களை வழங்காது என்று நான் உண்மையில் நம்ப விரும்புகிறேன். சீனாவின் இந்த அமைதி திட்டம் தொடர்பாக ஜின்பிங்கை சந்திக்க உள்ளேன்." என்றார். இருப்பினும், எப்போது இந்த சந்திப்பு நடைபெறும் என்ற தகவல் வெளியாகவில்லை.


Next Story