உக்ரைன் இறுதி வரை போராடும்! சுதந்திர தினத்தில் அதிபர் ஜெலன்ஸ்கி உரை

உக்ரைன் மீதான ரஷிய போர் நேற்றுடன் 6 மாதங்களை கடந்தது.
கீவ்,
உக்ரைன் மீதான ரஷிய போர் நேற்றுடன் 6 மாதங்களை கடந்தது. போரின் 6-வது மாதத்தை நிறைவு செய்த நேற்றைய தினம், உக்ரைன் தனது 33-வது சுதந்திர தினத்தை கொண்டாடியது.
சோவியத் யூனியனிலிருந்து 1991ஆம் ஆண்டு உக்ரைன் சுதந்திரம் பெற்றதை நேற்று கொண்டாடியது.
இதையொட்டி ரஷியா தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தும் என்றும், எனவே மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்கனவே எச்சரித்த இருந்தார்.
இந்த நிலையில், நேற்று, உக்ரைனின் மத்திய டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதியில் உள்ள சாப்லினோ நிலையத்தின் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சுதந்திர தின உரையில் உக்ரைன் மக்களிடம் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியதாவது:-
"நீங்கள்(ரஷியா) எந்த இராணுவத்தை வைத்திருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்கள் நிலத்தை மட்டுமே நாங்கள் கவனிக்கிறோம்.
பயங்கரவாதிகளுடன் புரிந்துணர்வு செய்ய உக்ரைன் முயற்சிக்காது. எங்களுக்கு உக்ரைன் என்பது அனைத்து 25 பிராந்தியங்களும், எந்த சலுகையும் அல்லது சமரசமும் இல்லாமல் இருக்கும் ஒரு முழுமையான உக்ரைன்.
உக்ரைன் இறுதி வரை போராடும்!" என்று சுதந்திர தினத்தன்று வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பேசினார்.