ஐ.நா. பொது சபையில் காஷ்மீர் விவகாரங்களை எழுப்பிய பாகிஸ்தான்: இந்தியா கடும் கண்டனம்


ஐ.நா. பொது சபையில் காஷ்மீர் விவகாரங்களை எழுப்பிய பாகிஸ்தான்:  இந்தியா கடும் கண்டனம்
x
தினத்தந்தி 23 Sep 2023 3:27 AM GMT (Updated: 23 Sep 2023 10:32 AM GMT)

ஐ.நா. பொது சபையில் காஷ்மீர் விவகாரங்களை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கடுமையான கண்டனங்களை தெரிவித்து உள்ளது.

நியூயார்க்,

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபையின் 78-வது கூட்டத்தொடரின்போது, பாகிஸ்தானின் பிரதமரான (பொறுப்பு) அன்வாரூல் ஹக் காக்கர் பேசும்போது, இந்தியா உள்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதி மற்றும் ஆக்கப்பூர்வ தொடர்புகளையே விரும்புகிறது.

பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு இடையே அமைதி ஏற்பட காஷ்மீர் விவகாரம் முக்கியம் என்று பேசினார். காஷ்மீர் விவகாரங்களை பற்றி ஐ.நா. பொது சபையில் எழுப்பியதற்காக, பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் ஐ.நா. பொது சபையின் இரண்டாவது குழுவுக்கான இந்தியாவின் முதன்மை செயலாளர் பெடல் கெலாட் கூறும்போது, இந்தியாவின் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை பாகிஸ்தான் காலி செய்து வெளியேற வேண்டும். எல்லை கடந்த பயங்கரவாதம் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.

அவர் பேசும்போது, பயங்கரவாதத்திற்கான கட்டமைப்புகளை அந்நாடு உடனடியாக மூட வேண்டும். சட்டவிரோத மற்றும் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு உள்ள இந்திய பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்றும், இந்தியாவின் உள்விவகாரங்களை பற்றி அறிக்கைகளை வெளியிட பாகிஸ்தானுக்கு எந்தவித உரிமையும் கிடையாது என்றும் அவர் வலியுறுத்தி கூறினார்.


Next Story