ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு ரஷியா மீண்டும் ஆதரவு


ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு ரஷியா மீண்டும் ஆதரவு
x

பொருளாதார வளர்ச்சியில் முன்னணி வகிக்கும் நாடாக இந்தியா உள்ளது என ரஷிய வெளியுறவு மந்திரி கூறியுள்ளார்.



மாஸ்கோ,


ரஷிய வெளியுறவு மந்திரி செர்கெய் லாவ்ரோவ் கூறும்போது, பொருளாதார வளர்ச்சியில் முன்னணி வகிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா தற்போது உள்ளது என நான் நினைக்கிறேன். ஒருவேளை அதில் தலைவராக கூட வரலாம்.

வேறு எந்த நாட்டையும் விட இந்தியாவின் மக்கள் தொகை விரைவில் பெரிய அளவில் அதிகரிக்க கூடும். பல்வேறு வகை விவகாரங்களில் தீர்வு காண்பதில் ராஜதந்திர அனுபவம் வாய்ந்த நாடாக, அங்கீகாரம் பெற்று தனது பகுதியில் தனக்கென இந்தியா ஒரு மதிப்பை பெற்றுள்ளது.

ஐ.நா.வில் ஈடுபாட்டுடன் இந்தியா பணியாற்றி வருகிறது. தெற்காசியாவில் பல்வேறு ஒருங்கிணைக்கும் கட்டமைப்பு பணியையும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புடன் இணைந்து சிறப்புடன் செய்து வருகிறது என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து அவர், இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் சர்வதேச செயற்பாட்டாளர்களாக உள்ளனர். அவர்களை ஐ.நா. கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக கணக்கில் கொள்ள வேண்டும் என ரஷிய வெளியுறவு மந்திரி லாவ்ரோவ் கூறியுள்ளார்.

நடப்பு ஆண்டில் கடந்த செப்டம்பரில் 77-வது ஐ.நா. பொது சபை கூட்டத்தில் லாவ்ரோவ் பேசும்போது, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவை சேர்ந்த நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சேர்க்கப்பட்டால், ஜனநாயகம் நிறைந்திருக்கும் என்றும் அவர் பேசியுள்ளார்.


Next Story