ஜாம்பியாவில் தாத்தா வாழ்ந்த பூர்வீக வீட்டை பார்வையிட்ட அமெரிக்க துணை ஜனாதிபதி


ஜாம்பியாவில் தாத்தா வாழ்ந்த பூர்வீக வீட்டை பார்வையிட்ட அமெரிக்க துணை ஜனாதிபதி
x

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஜாம்பியா நாட்டில் தனது தாத்தா வாழ்ந்த பூர்வீக வீட்டை பார்வையிட்டார்.

ஜாம்பியா சென்றார்

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி தற்போது அவர் தென்ஆப்பிரிக்க நாடான ஜாம்பியா சென்றுள்ளார்.அங்கு அவர் தலைநகர் லுசாகாவில் உள்ள தனது தாய் வழி தாத்தாவான கோபாலன் வாழ்ந்த வீட்டை பார்வையிட்டார். அப்போது அவர் தனது தாத்தா மற்றும் குடும்பத்தினருடனான பசுமையான தருணங்களை நினைவுகூர்ந்தார்.

தாத்தா வாழ்ந்த வீட்டை பார்வையிட்ட பிறகு ஜாம்பியா அதிபர் ஹகைண்டே ஹிச்சிலேமாவுடன் இணைந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார் கமலா ஹாரிஸ். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய அரசு ஊழியர்

நான் ஜாம்பியாவுக்கு வருகை தந்தது, எனக்கும், எனது குடும்பத்துக்கும் ஒரு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது உங்களில் பலருக்குத் தெரியும். எனது தாத்தா கோபாலன் இந்தியாவில் அரசு ஊழியராக இருந்தார். 1966-ல், ஜாம்பியா சுதந்திரம் அடைந்ததுமே, இந்தியாவின் சார்பில் நிவாரண நடவடிக்கைகள் மற்றும் அகதிகளுக்கான இயக்குநராக பணியாற்றுவதற்காக அவர் லுசாகாவுக்கு வந்தார்.அவர் ஜாம்பியாவின் முதல் ஜனாதிபதியான கென்னத் கவுண்டாவின் ஆலோசகராகவும் பணியாற்றினார். மேலும் அவர் அகதிகள் மீள்குடியேற்றத்தில் நிபுணராக இருந்தார்.

சென்னையை சேர்ந்தவர்

தாத்தா கோபாலன் பணியாற்றிய காலத்தில் நான் ஜாம்பியா வந்தேன். அப்போது நான் குழந்தையாக இருந்தேன். நான் இங்கு இருந்த நேரத்தை அன்புடன் நினைவில் கொள்கிறேன். நான் இங்கே இருந்ததையும், அது எப்படி உணர்ந்தது என்பதையும், அப்போது இருந்த அரவணைப்பு மற்றும் உற்சாகத்தையும் நான் நினைவில் வைத்திருக்கிறேன்.எனவே, இங்குள்ள அனைவருக்கும் எனது குடும்பத்தினர் மற்றும் எங்கள் அனைவரின் வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு கமலா ஹாரிஸ் பேசினார்.

கமலா ஹாரிசின் தாய் வழி தாத்தாவான கோபாலன் சென்னையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story