21 மாத குழந்தையில் கடத்தப்பட்டவர் 51 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்...!


21 மாத குழந்தையில் கடத்தப்பட்டவர் 51 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்...!
x

அமெரிக்காவில் 21 மாத குழந்தையாக இருந்த போது குழந்தை பராமரிப்பாளரால் கடத்தப்பட்ட பெண், 51 ஆண்டுகளுக்குப்பிறகு தனது குடும்பத்தினருடன் இணைந்துள்ள நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

சென்னை,

சிறு வயதில் கடத்தப்பட்ட குழந்தைகள் வளர்ந்த பிறகு பெற்றோர்களுடன் மீண்டும் இணைவது என்பது தமிழ் சினிமாவில் நாம் அடிக்கடி பார்த்த ஒரு செயலாகும். ஆனால், இதே சம்பவம் நிஜ வாழ்க்கையில் அரங்கேறும் போது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கும். அமெரிக்காவில் அப்படியொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் போர்ட் வொர்த்தில் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். 1971ம் ஆண்டு அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு அவர்கள் மெலிசா ஹைஸ்மித் என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த நிலையில், கைக்குழந்தையை பார்த்துக்கொள்ள குழந்தை பராமரிப்பாளரை மெலிசாவின் தாய் ஆல்டா நியமித்துள்ளார்.

1971ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23-ந் தேதி மெலிசாவை பார்த்துக்கொள்ளுமாறு குழந்தை பராமரிப்பாளரிடம் ஒப்படைத்துவிட்டு, ஆல்டா வெளியே சென்றுள்ளார். ஆனால், அந்த குழந்தையை பராமரிப்பாளர் கடத்திச் சென்று மாயமாகிவிட்டார். வீட்டிற்கு திரும்பிய மெலிசாவின் பெற்றோர்கள் தங்களது குழந்தையையும், குழந்தை பராமரிப்பாளரையும் காணாததால் ஊர் முழுவதும் தேடி உள்ளனர். பின்னர், தங்களது குழந்தை கடத்தப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

கைக்குழந்தையாக கடத்தப்பட்ட மெலிசாவை பெற்றோர்கள் தொடர்ந்து தேடி வந்தனர். ஆனாலும், மெலிசாவையும் அவரை கடத்திச்சென்ற அந்த குழந்தை பராமரிப்பாளர் பற்றியும் எந்த தகவலும் கிடைக்காமல் மிகுந்த மனச்சோர்வு அடைந்தனர். இந்த நிலையில், சுமார் 51 ஆண்டுகள் கழித்து மெலிசா பற்றி அவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதாவது போர்ட் வொர்த்தில் இருந்து சுமார் 1100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சார்லஸ்டன் பகுதியில் மெலிசா வசிப்பதாக கடந்த செப்டம்பர் மாதம் தகவல் கிடைத்துள்ளது.

தங்களது குழந்தை இருக்கும் இடம் குறித்து 51 ஆண்டுகளுக்கு பிறகு தகவலறிந்த பெற்றோர்கள், மெலிசா தானா? என உறுதிப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். மெலிசா பிறந்தபோது இருந்த அங்க அடையாளங்கள், டி.என்.ஏ. பரிசோதனை அனைத்தும் தற்போது தகவல் கிடைக்கப்பெற்ற பெண் தான் காணாமல்போன இவர்களது மகள் மெலிசா என்று உறுதி செய்தது. இதையடுத்து, 51 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட தனது மகளுடன் தற்போது அவரது பெற்றோர்கள் மீண்டும் இணைந்துள்ளனர்.

மெலிசாவும் இத்தனை ஆண்டுகளாக பார்க்க முடியாத தனது பெற்றோர்களையும், அவரது சகோதர, சகோதரிகளையும் சந்தித்து மகிழ்ச்சி அடைந்தார். இவர்களின் சந்திப்பு கடந்த சனிக்கிழமை நடைபெற்றுள்ளது. சிலர் மெலிசாவின் தாயார் ஆல்டாதான் மெலிசாவை கொலை செய்துவிட்டு, வழக்கை திசைதிருப்புவதற்காக கடத்தல் நாடகம் ஆடுவதாகவும் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில், தன் மீது சுமத்தப்பட்ட பழி நீங்கியதுடன் தனது மகளையும் உயிருடன் 51 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்திருப்பதால் ஆல்டா மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

1971-ல் டெக்சாசில் உள்ள் அவரது வீட்டிலிருந்து மெலிசா கடத்தப்பட்டார். டிஎன் ஏ சோதனை மூலமாக அவரது குடும்பம் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story