அமெரிக்கா: கார் பார்க்கிங் பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி; 5 பேர் காயம்


அமெரிக்கா:  கார் பார்க்கிங் பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி; 5 பேர் காயம்
x

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கார் பார்க்கிங் பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் சிக்கி ஒருவர் பலியாகி உள்ளார். 5 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

நியூயார்க்,

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பேஸ் பல்கலைக்கழகம் அருகே மான்ஹாட்டன் பகுதியில் 4 தளங்கள் கொண்ட கட்டிடத்தில், கார்களை வரிசையாக நிறுத்தும் பார்க்கிங் பகுதி அமைந்து உள்ளது.

இதன் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்து உள்ளது. அது கீழ் தளத்தின் மீது விழுந்ததில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. சிறிய மற்றும் பெரிய ரக கார்கள் என ஒன்றன் மீது ஒன்று விழுந்து உள்ளன.

இந்த சம்பவத்தில் சிக்கி ஒருவர் பலியாகி உள்ளார். 5 பேர் காயம் அடைந்து உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து, அவசரகால பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றனர். அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதில், சந்தேகத்திற்குரிய வகையில் சதி செயல் எதுவும் இல்லை என கூறப்படுகிறது. இந்த கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கிய அனைவரும் தொழிலாளர்கள் என தெரிய வந்து உள்ளது.

தொடர்ந்து 4 தளம் கொண்ட அந்த கட்டிடம் சரிந்து வருகிறது. இதனால் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளை தொடருவதில் ஆபத்து காணப்படுகிறது. இதனை தொடர்ந்து, மீட்பு பணியில், ரோபோக்களும் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

2003-ம் ஆண்டில் இருந்தே 25 விதிமீறல்கள் உள்பட, இதுவரை மொத்தம் 45 விதிமீறல்கள் இந்த கட்டிடத்தில் காணப்பட்டு உள்ளன. 20 ஆண்டுகளுக்கு முன் மேற்கூரையில் விரிசல்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதற்காக அபராதமும் கூட விதிக்கப்பட்டு உள்ளது.

கட்டிடம் சரிந்ததில் அருகேயிருந்த கட்டிடங்களும் கூட குலுங்கி உள்ளன. இதனால், அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். எனினும், அருகேயிருந்த மக்கள் உடனடியாக பாதுகாப்பான வேறு இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.


Next Story