பிரபாகரனின் மனைவி, மகள் உயிருடன் உள்ளார்களா...? இலங்கை அரசு மறுப்பு


பிரபாகரனின் மனைவி, மகள் உயிருடன் உள்ளார்களா...? இலங்கை அரசு மறுப்பு
x

பிரபாகரனின் மனைவி, மகள் உயிருடன் உள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவின.

கொழும்பு,

இலங்கையில் முப்பது ஆண்டுக் காலமாக நடந்த உள்நாட்டுப் போர், 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

மேலும் இறுதிக்கட்ட போரின்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவரது உறவினர்கள் உயிரிழந்ததாகவும் இலங்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மதிவதனியின் சகோதரி எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு பெண் சமூக ஊடகங்களின் மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில்

கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த போரின் காரணமாக எனது தங்கை மதிவதனி, மகள் துவாரகா மற்றும் உறவினர்கள் இறந்துவிட்டதாக இலங்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு, ஊடகத்தில் செய்திகளை அறிந்துகொண்டேன்.

கடந்த சில தினங்களாக அவர்கள் உயிருடன் இருப்பதாகக் கூறி வருவதையும் செய்திகளில் அறிந்துகொண்டேன். பிறகு அவர்களை நேரில் சந்தித்து உரையாடி அவர்களுடன் உணவருந்தி விட்டு வந்துள்ளேன்.

இந்த செய்தியை மிகவும் மகிழ்ச்சியுடன் எனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரிவித்து கொள்கிறேன். உண்மையில் இந்தச் செய்தியை கடவுள் கொடுத்த நன்கொடையாகவே நினைக்கின்றேன். நன்றி வணக்கம்!" என கூறி உள்ளார்.

வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் உயிருடன் உள்ளதாக வெளியான செய்தி போலியானது என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கேனல் நலின் ஹேரத் தற்போது தெரிவித்து உள்ளார்.

இதுவொரு நாடகம். தமது கவனத்தை ஈர்ப்பதற்காக இதுபோன்ற செயல்களைச் செய்கிறார்கள். இது ஒரு நகைச்சுவையான விஷயம் என கூறி உள்ளார்.


Next Story