குரங்கு அம்மை, உலகளாவிய நெருக்கடியா? - உலக சுகாதார அமைப்பு மீண்டும் பரிசீலனை

கோப்புப்படம்
குரங்கு அம்மை, உலகளாவிய நெருக்கடியா என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு மீண்டும் பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
லண்டன்,
கொரோனா தொற்று ஒரு பக்கம் அச்சுறுத்துகிறது என்றால் இன்னொரு பக்கம் குரங்கு அம்மை உலகை பயமுறுத்துகிறது. இந்த நோய் ஏற்கனவே ஆப்பிரிக்கா தொடங்கி ஐரோப்பா, அமெரிக்கா என பரவி வருகிறது. இதுவரை இந்த தொற்றால் 15 ஆயிரம் பேர் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் ஒரு பாலின சேர்க்கையாளர்களையும், இருபாலின சேர்க்கையாளர்களையும்தான் அதிகமாக தாக்குவதாக கூறப்படுகிறது.
இந்த தொற்றை தடுப்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் பல நாடுகள் ஆப்பிரிக்காவில் இருந்து தடுப்பூசிகளை வரவழைத்துள்ளன.
இந்த நிலையில், குரங்கு அம்மை நோயை உலகளாவிய நெருக்கடியாக அறிவிப்பது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு இரண்டாவது முறையாக பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒரு வேளை இந்த நோயை உலகளாவிய நெருக்கடியாக அறிவித்தால் அது தடுப்பூசிக்காக உலக நாடுகள் பலவற்றையும் படையெடுக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிரிக்காவில் இந்த தொற்று 70-க்கும் மேற்பட்டோரை கொன்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.






