இலங்கைக்கு ரூ.5 ஆயிரம் கோடி நிதி உதவி: உலக வங்கி வழங்குகிறது


இலங்கைக்கு ரூ.5 ஆயிரம் கோடி நிதி உதவி: உலக வங்கி வழங்குகிறது
x

கோப்புப்படம்

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு உலக வங்கி ரூ.5 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்குகிறது.

கொழும்பு,

பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வரும் இலங்கை திவாலாகும் நிலைக்கு சென்று விட்டது. உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பட்டினியில் வாடும் நிலைக்கு மக்கள் சென்று கொண்டிருப்பதாக அரசு கூறியுள்ளது.

இந்த நெருக்கடியில் இருந்து மக்களை மீட்பதற்கு உதவுமாறு சர்வதேச நாடுகளுக்கும், சர்வதேச நிதி நிறுவனங்களுக்கும் இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்து உள்ளது.

இதில் முக்கியமாக உலக வங்கியிடம் நிதி உதவி கேட்டு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. குறிப்பாக, இலங்கை வெளியுறவு மந்திரி பெய்ரீஸ் உலக வங்கியின் இலங்கை-மாலத்தீவு மேலாளர் சியோ கண்டாவை கடந்த வாரம் சந்தித்து பேசினார்.

ரூ.5 ஆயிரம் கோடி

அப்போது அவர், இலங்கைக்கு சர்வதேச நிதியம் மற்றும் பிற சர்வதேச நிறுவனங்கள் மற்றும் நன்கொடை நாடுகள் மூலம் நீண்ட கால உதவி கிடைக்கும் வரை உதவுமாறு கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து, இந்த கடினமான சூழலில் இருந்து இலங்கையை மீட்பதற்கு 700 மில்லியன் டாலர்களை (சுமார் ரூ.5 ஆயிரம் கோடி) வருகிற மாதங்களில் வழங்குவதாக சியோ கண்டா உறுதியளித்துள்ளார்.

இதைப்போல ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் ஐ.நா. ஆகியவற்றுடன் இணைந்து, ஏற்கனவே உறுதியளித்த திட்டங்களை மீண்டும் செயல்படுத்தவும் உலக வங்கி உதவும் எனவும் அவர் உறுதியளித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே, இலங்கையின் கொள்கைகளுக்கு இணங்க உதவுவதில் உறுதியாக இருப்பதாக சர்வதேச நிதியம் தெரிவித்து இருந்தது.

குறிப்பாக 300 மில்லியன் டாலர் முதல் 600 மில்லியன் டாலர் வரை இலங்கைக்கு வழங்குவதாக சர்வதேச நிதியம் கூறியிருந்த நிலையில், உலக வங்கியும் தற்போது இலங்கைக்கு உதவ முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க தூதருடன் சந்திப்பு

இந்த நிலையில், இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங்கை பெய்ரீஸ் சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

அப்போது தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீள்வதற்கு அமெரிக்கா அளித்து வரும் ஆதரவுகளுக்கு பெய்ரீஸ் நன்றியும் தெரிவித்துக்கொண்டார்.

மேலும், இலங்கையில் அதிபருக்கான அதிகாரத்தை குறைத்து, நாடாளுமன்றத்துக்கான அதிகாரத்தை அதிகரிக்கும் வகையில் அரசியல் சட்டத்தில் கொண்டு வர திட்டமிடப்பட்டிருக்கும் 21-வது திருத்தம் குறித்து ஜூலியிடம் பெய்ரீஸ் எடுத்துரைத்தார்.

இந்த சட்டதிருத்தம் மூலம், அதிபருக்கு அதிக அதிகாரம் வழங்க வகை செய்யும் 20ஏ சட்டப்பிரிவு நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரணில் விக்ரமசிங்கே உரை

முன்னதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், இந்த 21-வது சட்ட திருத்தம் செயல்படுத்தப்படுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்த சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறும்போது, அது இலங்கைக்கு பல்வேறு வழிகளில் உதவும் என அவர் கூறினார்.

நிதி அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் வழங்குவதற்கு தற்போதுள்ள சட்டங்களை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ரணில் விக்ரமசிங்கே, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளை பின்பற்றி வலுவான மற்றும் சக்தி வாய்ந்த சட்டத்தை முன்மொழிவதாகவும் தெரிவித்தார்.

1 More update

Next Story