ஐ.நா. பருவநிலை மாநாடு: எகிப்தில் குவிந்து வரும் உலக தலைவர்கள்


ஐ.நா. பருவநிலை மாநாடு: எகிப்தில் குவிந்து வரும் உலக தலைவர்கள்
x

ஐ.நா. பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக உலக தலைவர்கள் எகிப்து நாட்டில் குவிந்து வருகின்றனர்.

கெய்ரோ,

பருவநிலை மாற்றத்தால் உலக நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. பெரும் வெள்ளம், புயல், அதீத மழையினால் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புகளும் ஏற்படுகின்றன.

மேலும் ஆர்டிக், அண்டார்டிக்கா கண்டங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருவதால் உலக நாடுகள் இதுவரை கண்டிராத பெரும் அபாயத்தை எதிர்கொள்ள இருப்பதாக விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

இதன்காரணமாக பருவநிலை மாற்றத்தை சமாளிக்கவும், அதன் தீவிரத்தை குறைக்கவும் உலகநாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

27-வது மாநாடு

அதன் ஒரு பகுதியக ஐ.நா. பருவநிலை மாற்ற பணித்திட்டம் கடந்த 1992-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 1994-ம் ஆண்டில் அது முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது.

இந்த பணித்திட்டத்தில் கையெழுத்திட்டுள்ள 198 நாடுகளும், 1995 முதல் ஆண்டுதோறும் பருவநிலை மாநாட்டை கூட்டி, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து விவாதித்து வருகின்றன. அந்த வகையில் ஐ.நா. பருவநிலை மாற்ற பணித்திட்டத்தின் 27-வது மாநாடு எகிப்து நாட்டின் ஷார்ம் எல் ஷேக் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது.

50-க்கும் மேற்பட்டஉலக தலைவர்கள்

வருகிற 18-ந்தேதி வரை 2 வாரங்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் பங்கேற்று பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான தங்களின் பரிந்துரைகளையும், முன்னெடுப்புகளையும் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள். இதையொட்டி நேற்று முதல் எகிப்தில் உலக தலைவர்கள் குவிந்து வருகின்றனர். பிரான்ஸ் அதிபர் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பக்ரைன் மற்றும் ஜோர்டான் நாடுகளின் மன்னர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட தலைவர்கள் நேற்றை மாநாட்டில் பங்கேற்றனர்.

ஐ.நா. பொதுச்செயலாளர்

இந்த மாநாட்டில், பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் ஏழை மற்றும் வளரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் இழப்பீடு வழங்குவது தொடர்பாக விவாதிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநாட்டில் தொடக்க உரையாற்றி ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ், "ஐ.நா. பருவநிலை உச்சிமாநாட்டுடன் மனிதகுலம் ஒத்துழைக்க வேண்டும் அல்லது அழிய வேண்டும். நாம் பருவநிலை நரகத்துக்கான நெடுஞ்சாலையில் இருக்கிறோம். நமது கால்கள் தொடர்ந்து அதை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது" என எச்சரித்தார்.

அடுத்தடுத்து வரும் நாட்களில் உலக தலைவர்கள் பலரும் மாநாட்டில் பங்கேற்று உரையாற்ற இருக்கிறார்கள்.


Next Story