அரசுமுறை பயணமாக அமெரிக்க நிதி மந்திரி சீனா செல்கிறார்
அமெரிக்காவின் நிதித்துறை மந்திரி ஜேனட் யெலன் சீனா செல்ல இருக்கிறார்.
வாஷிங்டன்,
உக்ரைன் போரில் ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாடு, தைவான், ஹாங்காங் உடனான உறவு போன்ற காரணங்களால் சீனா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. உளவு பலூன் விவகாரம் அமெரிக்காவை மேலும் கோபமூட்டியது. சலசலப்புகள் ஓய்ந்த பின்னர் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் அரசுமுறை பயணமாக சீனா சென்றார். இருதரப்பு உறவுகளுக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் இந்த பயணம் அமைந்ததாக கூறப்பட்டது. ஆனால் அதை தொடர்ந்து நிதி திரட்டுதல் விழா ஒன்றில் 'சீன அதிபர் ஜின்பிங் ஒரு சர்வாதிகாரி' என பைடன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் அமெரிக்காவின் நிதித்துறை மந்திரி ஜேனட் யெலன் சீனா செல்ல இருக்கிறார். அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் சீனாவில் முதலீடு செய்துள்ளன. இதனால் இருதரப்பு பொருளாதாரங்களை வலுப்படுத்தும் நோக்கில் இந்த பயணம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் முதல் பெண் நிதி மந்திரி என்ற பெருமை கொண்ட யெலன் அரசுமுறை பயணமாக சீனா செல்வது உலக அரசியலின் கவனத்தை ஈர்த்துள்ளது.