கசோகி படுகொலைக்கு நீங்களே பொறுப்பு; சவுதி இளவரசரிடம் கூறிய அமெரிக்க அதிபர் பைடன்


கசோகி படுகொலைக்கு நீங்களே பொறுப்பு; சவுதி இளவரசரிடம் கூறிய அமெரிக்க அதிபர் பைடன்
x

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் கசோகி படுகொலைக்கு நீங்களே பொறுப்பு என சவுதி இளவரசர் சல்மானிடம் கூறினேன் என அமெரிக்க அதிபர் பைடன் கூறியுள்ளார்.



ஜெட்டா,



தி வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட பத்திரிகைகளுக்கு செய்தியாளராக பணியாற்றியவர் ஜமால் கசோகி. இவர் கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் 2ந்தேதி கொலை செய்யப்பட்டார். இவரது கொலை குறித்து அப்போது சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

சவுதி அரசையும், இளவரசர் முகமது பின் சல்மானையும் தொடர்ந்து விமர்சித்து எழுதி வந்த ஜமாலை தீர்த்துக்கட்ட சவுதி அரசு திட்டமிட்டு உள்ளது. துருக்கி நாட்டை சேர்ந்த ஹெயிஸ் செங்குஸ் என்ற பெண்ணுடன் ஜமாலுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. ஹெயிஸ் செங்குஸை திருமணம் செய்ய ஜமால் முடிவு செய்து, தொடர்ந்து துருக்கி நாட்டுக்கு சென்றுள்ளார்.

இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரகத்துக்கு விவாகரத்து வாங்கியது தொடர்பான ஆவணங்களை பெறுவதற்காக கடந்த செப்டம்பர் 28ந்தேதி அவர் சென்றுள்ளார். இவரை மீண்டும், அக்டோபர் 2ந்தேதி தூதரகத்துக்கு வருமாறு கூறி அனுப்பியுள்ளனர். சவுதி தூதரகத்துக்குள் சென்றவர் மீண்டும் திரும்பவே இல்லை.

இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரகத்தின் உள்ளேயே ஜமால் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இவரை கொல்வதற்காக ரியாத்திலிருந்து 15 பேர் கொண்ட சிறப்பு குழு இஸ்தான்புல்லுக்கு சென்றுள்ளது. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் வெளிநாடுகளுக்கு செல்லும்போது பாதுகாப்பாக செல்பவர்கள் தான் இந்த சிறப்பு குழு. ஜமாலை சித்ரவதை செய்து கொன்ற பின்னர், உடற்கூறு ஆய்வு நிபுணர் அவரின் உடலை 15 பகுதிகளாக வெட்டியுள்ளார். பின்னர், உடல்பாகங்களை சூட்கேஸில் வைத்து அடைத்து காரில் கொண்டு சென்று காட்டு பகுதியில் வீசியுள்ளனர். இந்த தகவல் உலக நாடுகள் மத்தியில் அரசியல் ரீதியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்கா, சவுதியை எச்சரித்தது. இந்த சம்பவத்துக்கு ஜெர்மன் அரசு கண்டனம் தெரிவித்தது.

2018ம் ஆண்டில் கசோகி படுகொலைக்கு பின்பு தீண்டத்தகாத நாடு என சவுதியை, பைடன் கூறினார். இந்த படுகொலையில் தொடர்பில்லை என இளவரசர் சல்மான் கூறினார். இந்நிலையில், இஸ்ரேல் நாட்டில் இருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அமெரிக்க அதிபர் பைடன் புறப்பட்டு சென்றார். அவர், சவுதியுடனான உறவை மறுசீரமைத்து கொள்வதற்காக மேற்கொண்ட இந்த பயணத்தில் சவுதி இளவரசரை சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பு பற்றி பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பைடன், பத்திரிகையாளர் கசோகி படுகொலை விவகாரம் பற்றி கூட்டத்தில் நேரடியாகவே எழுப்பினேன். இதுபற்றி பேசினேன். என்னுடைய தெளிவான பார்வையை தெரியப்படுத்தினேன். மனித உரிமைகள் சார்ந்த விவகாரத்தில் அமைதியாக இருப்பது அமெரிக்காவின் அதிபருக்கு உகந்தது அல்ல என நேரிடையாகவே கூட்டத்தில் கூறினேன் என கூறியுள்ளார்.

சவுதியில் இருந்தவரான பத்திரிகையாளர் கசோகியை உயிருடன் பிடிக்க அல்லது கொல்வதற்கான திட்டத்திற்கு இளவரசர் சல்மான் ஒப்புதல் வழங்கினார் என அமெரிக்க உளவு பிரிவு தெரிவித்து இருந்தது.

இந்த சந்திப்பில், தனிப்பட்ட முறையில் அதற்குதான் பொறுப்பில்லை என என்னிடம் இளவரசர் கூறினார் என்று பைடன் கூறியுள்ளார். அவர் அப்படி கூறுவார் என நான் நினைத்திருந்தேன் என அவரிடம் சுட்டி காட்டினேன் என்றும் பைடன் கூறியுள்ளார். கசோகி படுகொலைக்கு நீங்களே பொறுப்பு என சவுதி இளவரசரிடம் கூறினேன் என்று பைடன் கூறியுள்ளார்.

இந்த சந்திப்பில், பெரிய அளவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடான சவுதி அரேபியாவுடன் ஆற்றல் துறை பற்றியும் பேசப்பட்டு உள்ளது. அதிபர் வேட்பாளராக பைடன் இருந்தபோது, கசோகி படுகொலையை தொடர்ந்து, அந்நாட்டை உலக அரங்கில் இருந்து தீண்டத்தகாத நாடாக ஒதுக்க வேண்டும் என்று கூறினார். இந்த விமர்சனத்திற்காக வருத்தம் தெரிவிக்கவில்லை என்றும் இளவரசருடனான சந்திப்பிற்கு பின்பு செய்தியாளர்களிடம் பைடன் கூறியுள்ளார்.


Next Story