கிறிஸ்து பிறப்பின் செய்தி


கிறிஸ்து பிறப்பின் செய்தி
x
தினத்தந்தி 23 Dec 2016 5:45 AM IST (Updated: 22 Dec 2016 3:42 PM IST)
t-max-icont-min-icon

பார் மீட்கும் பாலகனாய் பெத்லேகேமில் வந்துதித்த இயேசு கிறிஸ்துவின் பிறந்த நிகழ்வாம் ‘கிறிஸ்துமஸ்’ நல் வாழ்த்துகள். உலகில் பிறந்தவர்களில், வரலாற்றில் இடம் பிடித்தவர்கள் சிலர் தான். ‘சாதனையாளர்கள்’ என்று அவர்களின் வாழ்வை நாம் கொண்டாடி மகிழ்கிறோம். அந்த பட்டியல் மிக நீளமானது.

பார் மீட்கும் பாலகனாய் பெத்லேகேமில் வந்துதித்த இயேசு கிறிஸ்துவின் பிறந்த நிகழ்வாம் ‘கிறிஸ்துமஸ்’ நல் வாழ்த்துகள்.

உலகில் பிறந்தவர்களில், வரலாற்றில் இடம் பிடித்தவர்கள் சிலர் தான். ‘சாதனையாளர்கள்’ என்று அவர்களின் வாழ்வை நாம் கொண்டாடி மகிழ்கிறோம். அந்த பட்டியல் மிக நீளமானது.

1483–ம் ஆண்டு ஜெர்மனியின் ஈச்பென் கிராமத்தில் ஒரு குழந்தை பிறந்தது, அவர்– சமய சீர்திருத்தம் கொண்டு வந்த மார்டின் லூத்தர்.

1809–ம் ஆண்டு அமெரிக்காவில் ஹார்டின் என்னுமிடத்தில், கெண்டகியில் ஒரு மர வீட்டில், ஒரு குழந்தை பிறந்தது. அவர்– அடிமைத்தளத்தை ஒழித்த ஆபிரகாம் லிங்கன்.

1910–ம் ஆன்டு அல்பேனியாவில் எளிமையான சூழலில் ஒரு குழந்தை பிறந்தது. அவர் தான் குப்பைத் தொட்டிகளிலிருந்த குழந்தைகளின் முகத்தில் இயேசுவைக் கண்ட புனித அன்னை தெரசா.

இவர்களுடைய பிறந்தநாள் விழாக்களை நாம் ஆண்டு தோறும் கொண்டாடுகிறோம். ஆனாலும் அவர்களைக் குழந்தையாக நாம் நினைத்துப் பார்த்து விழா எடுப்பதில்லை.

உலகில் பிறந்த குழந்தைகளிலேயே, வாழ்ந்து முடித்து பல நூற்றாண்டுகளான பின்பும், ஒரே ஒருவரின் பிறந்த நாளில்    மட்டும் தான் அவரை குழந்தையாக நினைத்துப் பார்க்கிறோம். மற்றவர்களின் பிறந்த நாட்களில் நாம் அவர்களை சாதனை படைத்த பெரியவர்களாகவே கற்பனை செய்து பார்க்க முடி      கிறது, நினைவுகூர முடிகிறது.

காரணம், இக்குழந்தை பிறக்கும் போதே சமுதாயத்தில் பல நேர்மறையான சிந்தனைகளைக் கொண்டு வருகின்ற குழந்தையாக இருந்தது.

மாற்றங்களை ஏற்படுத்திய குழந்தை

‘அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்’ (மத்தேயு 1:21) என இயேசுவை பாவங்களை மீட்க வந்த குழந்தை என விவிலியம் கூறுகிறது.

இயேசு பிறந்த போது ‘ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று’ (மத் 2: 3) என்கிறது விவிலியம். அதாவது ஆளும் அதிகார வர்க்கத்தின் அஸ்திவாரம் அவரது வருகையால் கலங்கிப்போனது.

இக்குழந்தையைக் கருவில் சுமக்கிற போது ஒரு சாதாரண பாமரத்தாய் புரட்சிப்பாடல் பாடினார். இதை லூக் 1:46 முதல் 55 வரையிலான வசனங்கள் விளக்குகின்றன.

எனவே தான் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு வித்தியாசமானது. பிறக்கும்போதே சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்திய குழந்தை.

புறப்படச் சொன்ன குழந்தை

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பால் பெத்லேகேம் எனும் சிறிய பட்டணம் திடீரென அதிக சிறப்புப் பெற்றது. அன்றைய சூழலில் அனேகர் பெத்லேகேம் போனார்கள்.

யூதர்கள் பலர் பெத்லேகேம் சென்றனர். இதை, ‘தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர்’ (லூக் 2:3) எனும் வசனம் விளக்குகிறது. ‘அவர்களோடு கூட மரியாளும் யோசேப்பும் நாசரேத்துக்குப் போனார்கள்’ (லூக் 2:5). அப்போது மரியா நிறைமாத கர்ப்பிணியாய் இருந்தார்.

‘தேவதூதர்கள், மேய்ப்பர்களுக்கு இயேசுவின் பிறப்பின் செய்தி அறிவிக்கப் போனார்கள். செய்தி கேட்ட மேய்ப்பர்கள் உடனே புறப்பட்டு குழந்தையைப் பார்க்கப் பெத்லேகேம் போனார்கள்’ (லூக் 2:9,12).

‘கிழக்கிலிருந்து வானியல் ஞானியர் பெத்லேகேம் சென்றார்கள், நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்’ (மத் 2:11)

இப்படி உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் பெத்லேகேம் சென்ற யாருமே பெத்லேகேமில் தங்கிவிடவில்லை. பெத்லேகேமிலிருந்து திரும்பிச் சென்றார்கள்.

கிறிஸ்துமஸ் காலங்களில் ஒவ்வொருவரும் இன்றளவும் கூட கற்பனையில் பெத்லேகேம் போகிறோம். ஆனால் கிறிஸ்மஸ் என்பது பெத்லேகேம் போவதில் அல்ல, பெத்லேகேமிலிருந்து புறப்பட்டுப் போவதில் தான் முழுமை பெறுகிறது.

ஒரு விண்கலத்தில் மனிதன் பயணித்து சந்திரனில் கால்பதிப்பது வரலாற்றுச் சாதனையெனில், கடவுள் விண்ணிலிருந்து புறப்பட்டு பூமியில் கால் பதிப்பது வரலாற்று மாற்றங்களுக்கான சாதனை.

முந்தையது மனிதன் கண்டுபிடித்தது. பிந்தையது மனிதனையே கண்டுபிடித்தது.

முழுமையான அன்பைப் பெற்றிட, அன்பைப் பகிர்ந்திட, விடுதலை வாழ்வை வழங்கிட, வழங்கப்பட்ட விடுதலை வாழ்வு இன்றளவும் பகிரப்பட பெத்லேகேம் போவதில் அல்ல, பெத்லேகேமிலிருந்து புறப்பட்டுப் போவது தான் அழைப்பாய் இருக்கிறது.

நம்மோடு இருக்கும் குழந்தை

‘‘அக்குழந்தைக்கு அவள் ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவார்’’ என்பது இறைவாக்கினர் ஏசாயா (7:14) வாக்கு. இம்மானுவேல் என்றால் ‘கடவுள் நம்முடன் இருக்கிறார்’ என்று அர்த்தம். (மத் 1:23)

ஒரு குடும்பத்தார் ஒரு பெரிய ஓட்டலில் மிகப்பெரிய விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். பக்கத்து வீட்டுக்காரர்கள் தற்செயலாக அவர்களை ஓட்டலில் சந்தித்து என்ன கொண்டாட்டம் என வினவினர். ‘எங்கள் வீட்டுக் கடைக்குட்டிக்குப் பிறந்த நாள்’ என்று அவர்கள் பதிலளித்தனர். ‘சரி வந்தது வந்துட்டோம், குழந்தையை வாழ்த்திச் செல்வோம்’ எனும் எண்ணத்தில் ‘குழந்தை எங்கே?’ என்றார்கள்.

‘அவன் இங்கே இருந்தால் அழுது தொந்தரவு செய்வான். விழாவை மகிழ்ச்சியோடு கொண்டாட முடியாது. எனவே அவனை வீட்டிலேயே பாட்டியம்மாவிடம் விட்டு விட்டு வந்து விட்டோம்’ என்றார்கள்.

விழா நாயகன் வீட்டில் பாட்டியம்மா பாதுகாப்பில், விழா நாயகனின் பிறந்தநாள் ஓட்டலில் கோலாகலமாக!

குழந்தை இல்லாமல் குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டமாகி விடக் கூடாது இந்த கிறிஸ்து பிறப்பு. இம்மானுவேல்– அவர் நம்மோடு இருப்பதில் தான் அவர் பிறப்பின் நோக்கம் முழுமை அடைகிறது.

கிறிஸ்து பிறப்பின் நோக்கம் உலக மக்கள் அனைவரின் வாழ்விலும் முழுமை பெறட்டும். அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துகள்

ஞா.வெலிங்டன் ஜேசுதாஸ், நல்மேய்ப்பர் ஆலயம், வேளச்சேரி, சென்னை.

Next Story