8. திருப்பாவை - திருவெம்பாவை


8. திருப்பாவை - திருவெம்பாவை
x
தினத்தந்தி 23 Dec 2016 6:17 AM GMT (Updated: 23 Dec 2016 6:16 AM GMT)

திருப்பாவை கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான்போ கின்றாரைப் போகாமற் காத்து உன்னைக் கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய பாவாய்! எழுந்திராய் பா

திருப்பாவை

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான்போ கின்றாரைப் போகாமற் காத்து உன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடி பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாய் என்று ஆராய்ந்து அருளாலோர் எம்பாவாய்.


கண்ணனாலே மிகவும் விரும்பத்தக்க பதுமை போன்றவளே! கிழக்கு வானம் வெளுத்துவிட்டது. பனிப்புல் மேய்ச்சலுக்கு எருமைகள் தோட்டத்திற்கு கிளம்பிச் சென்று விட்டன. ஆயர்குலப் பெண்கள் அனை வரும் நீராடப் புறப்பட்டுச் சென்று விட்டார்கள். மற்ற பெண்களைத் தடுத்து நீ வருவாயென உன் மாளிகை வாசலில் வந்து நின்று உன்னைக் கூவி அழைக்கின்றோம். கேசி என்னும் அரக்கன் குதிரை வடிவில் வந்தபோது அவன் வாயைப் பிளந்து கொன்றவனும், கம்சனால் அனுப்பப்பட்ட மல்லர்களை மல்யுத்தம் மூலம் வென்றவனுமாகிய நம் தலைவன் கண்ணனை வணங்கினால், நாம் வேண்டும் அனைத்தையும் அளிப்பான். எனவே உடனே கிளம்புவாயாக!.

திருவெம்பாவை

கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோங் கேட்டிலையோ
வாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்

சேவல்கள் கூவுகின்றன. பறவைகள் எங்கும் ஒலிக்கின்றன. ஏழிசைகள் எங்கும் முழங்குகின்றன. ஒப்பற்ற பரம்பொருளின் பெருமை பேசும் பாடல்களை நாங்கள் பாடி நிற்கிறோம். இவையெல்லாம் உன் காதில் விழ வில்லையோ? இது என்ன உறக்கம்? அருட்கடலாகிய சிவன் மீது நீ காட்டும் அன்பு இதுதானோ? பேரூழியின் இறுதியில் ‘தான் ஒருவனே அழிவில்லாமல் நிற்பவன்’ எனக்காட்டிய உமையரு பாகனை இனியாவது பாடுவாயாக.


Next Story