அபிஷேகத்தின் போது நிறம் மாறும் பால்!


அபிஷேகத்தின் போது நிறம் மாறும் பால்!
x
தினத்தந்தி 26 Dec 2016 9:30 PM GMT (Updated: 26 Dec 2016 9:56 AM GMT)

நவக்கிரகங்களில் ராகு பகவானுக்கு உரிய தலமாக விளங்குவது, திரு நாகேஸ்வரம் நாகநாதர் கோவில். ராகுபகவான் சிவபெருமானை பூஜை செய்த திருத்தலம் இது.

வக்கிரகங்களில் ராகு பகவானுக்கு உரிய தலமாக விளங்குவது, திரு நாகேஸ்வரம் நாகநாதர் கோவில். ராகுபகவான் சிவபெருமானை பூஜை செய்த திருத்தலம் இது. ராகு பூஜை செய்ததால் இத்தலத்திற்கு ‘திருநாகேஸ் வரம்’ என்ற பெயர் வந்தது. நாகநாதர் கோவில் வெளிப்பிரகாரத்தின் தென் மேற்கு மூலையில் ராகு பகவான், தனது இரு தேவிகளான நாகவல்லி, நாககன்னி ஆகியோருடன் எழுந்தருளியுள்ளார். இத்திருத்தலத்தில் ஐந்தலை அரவு எனும் ராகு பகவானுக்கு பால் அபிஷேகம் செய்தால், பால் நீலநிறமாக மாறுவது இங்கு தனிச் சிறப்பாகும். இதை பக்தர்கள் கண்ணார கண்டு வழிபடலாம்.

கடந்த பல வருடங்களுக்கு முன்பு ராகுவின் திருமேனியில் 5½ அடி நீளமுடைய பாம்பு தனது சட்டையினை உரித்து மாலையாக அணிவித்து இருந்த காட்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு வழிபட்டனர். அந்த பாம்புச்சட்டையை பெரிய கண்ணாடி பேழைக்குள் வைத்து பக்தர்கள் வழிபடுவதற்கு வசதியாக கோவிலில் வைக்கப்பட்டுள்ளது.

நாகநாதர்

ராஜ வம்சத்து மன்னன் ஒருவருக்கும் அசுரகுல பெண்ணுக்கும் மகனாக பிறந்தவர் ராகு. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அசுரனாகிய ராகு உருமாறி தேவர்கள் வரிசையில் சேர்ந்து மகாவிஷ்ணு விடம் இருந்து அமிர்தத்தைப் பெற்று உண்டு விட்டான். உண்மை அறிந்த மகாவிஷ்ணு கையிலிருந்த அகப்பையால் அவனது தலையில் அடிக்க, தலை தனியாகவும், உடல் தனியாகவும் ஆனது. ஆனாலும் அமிர்தம் உண்ட மகிமையால் அவன் தலைப்பகுதியில் உயிர் இருந்தது. ராகுவும் தவறுக்கு வருந்தி இறைவனை வேண்டி நிற்க இறைவன் பாம்பின் உடலை அவனுக்கு கொடுத்து, அவனை ஒரு நிழல் கிரகமாக ஆக்கினார்.

சுசீலர் என்ற முனிவரின் மகன் சுகர்மனை, நாக அரசனான தக்கன் தீண்டியது. இதை அறிந்த முனிவர் கோபம் கொண்டு, தன் மகனை தீண்டிய தக்கன் பூலோகத்தில் மனிதனாக பிறக்கும்படி சாபம் கொடுத்தார். இந்த சாபம் நீங்க காசிப முனிவரின் ஆலோசனைப்படி, தக்கன் பூமிக்கு வந்து திருநாகேஸ்வரத்தில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து தனது மனைவியருடன் வழிபட்டான். சிவன் அவனுக்கு காட்சி தந்து சாப விமோசனம் கொடுத்தார். இவரே இத்தலத்தில் நாகநாதர் என்ற பெயரில் அருளாசி வழங்கி வருகிறார்.

தலவரலாறு

கயிலாயத்தில் சிவபெருமானை மட்டுமே பிருகு முனிவர் வணங்கி வந்தார். இதனால் கோபம் கொண்ட பார்வதி, சிவனிடம் அர்த்தநாரீஸ்வரர் வடிவம் வேண்டி கடும் தவம் புரிந்தாள். பார்வதியின் தவத்துக்கு மகிழ்ந்த இறைவன் அவளுக்கு தன் உடலில் பாதியை கொடுத்து உமையொரு பாகமானார். அர்த்தநாரீஸ்வரர் வடிவம் உலகில் பல இடங்களில் அமைய வேண்டும் என்று வேண்டினாள். அதன்படி இந்த தலத்தில் அர்த்தநாரீஸ்வரர் வடிவில் சிவபெருமான், பார்வதி தேவி காட்சியளிக்கின்றனர். இறைவன் பெயர் நாகேஸ்வரர். சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இறைவியின் பெயர் பிறையணிஅம்மன்.  மகாசிவராத்திரி அன்று ராகு பகவான், நாகநாதரை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றார். இதனால் அவர் தினமும் சிவதரிசனம் பெறவேண்டி தனது மனைவிகள் நாகவல்லி, நாககன்னி ஆகியோருடன் மங்கள ராகுவாக  திருநாகேஸ்வரத்தில் தங்கி விட்டார்.

பொதுவாக ராகுபகவான் மனித தலை, நாக உடலுடன் தான் காட்சி தருவார். ஆனால் இக்கோவிலில் ராகுபகவான் தனிச்சன்னிதியில் மனித வடிவில் காட்சி தந்து தம்மை வழிபடுவோருக்கு கிரக தோஷம் நீக்கி, யோகம், பதவி, தொழில், வளமான வாழ்வு, எதிர்ப்புகளை சமாளிக்கும் திறன், வறுமை, நோய் நீக்கம், கடன், வெளிநாட்டு பயண யோகம் ஆகியவற்றை அருள்கிறார்.

இத்திருக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபட்டு தங்கள் குறைகள் நீங்கப்பெற்று வாழ்வில் அனைத்து வெற்றிகளையும் பெற்று வருகின்றனர். இத்தல இறைவனுக்கு நாகநாதர், அர்த்தநாரீஸ்வரர் என இரு சன்னிதிகள் உண்டு. அதைப்போல அம்மனுக்கும் 2 சன்னிதிகள் உள்ளன.  இத்தலத்தில் ராகுபகவான் உருவாக்கிய நாக தீர்த்தம், சூரிய தீர்த்தம், எம தீர்த்தம் உள்ளிட்ட 12 தீர்த்தங்கள் இருக்கின்றன. ஆதி விநாயகர், கிரிகுஜாம்பிகை, சரஸ்வதி, லட்சுமி, நவக்கிரகங்கள், அறுபத்து மூவர்கள் மற்றும் இதர தெய்வங்களுக்கும் சன்னிதி உண்டு. நாகதோஷம் உள்ளவர்களுக்கு சிறந்த பரிகார தலம் இதுவே ஆகும். காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.

வழியும்–தூரமும்

திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் சாலையில் 6 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து வரும் பக்தர்கள் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் இறங்கி, பஸ், ஆட்டோ மூலமாக நாகநாதர் கோவிலை சென்றடையலாம். கும்பகோணத்தில் இருந்து நாகநாதர் கோவிலுக்குச் செல்ல அடிக்கடி நகர பஸ்கள் இயக்கப்படு கின்றன.

 – செந்தூர் திருமாலன்.

Next Story