பக்தனுக்கு தலைசாய்த்த பெருமான்


பக்தனுக்கு தலைசாய்த்த பெருமான்
x
தினத்தந்தி 27 Dec 2016 9:34 AM GMT (Updated: 27 Dec 2016 9:34 AM GMT)

காசிக்கு ஒப்பாக மூன்று தலங்கள் உள்ளன. ஒன்று உத்தர காசியாகிய மல்லிகார்ச்சுனம். இது ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம். மற்றொன்று மத்திய காசியாகிய மத்தியார்ச்சுனம்.

காசிக்கு ஒப்பாக மூன்று தலங்கள் உள்ளன. ஒன்று உத்தர காசியாகிய மல்லிகார்ச்சுனம். இது ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம். மற்றொன்று மத்திய காசியாகிய மத்தியார்ச்சுனம். இது தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர். மூன்றாவது தட்சிண காசியாகிய புடார்ச்சுனம் எனப்படும் திருப்புடைமருதூர் கோமதி அம்பாள் சமேத நாறும்பூநாதர் சுவாமி திருக்கோவில். இந்த மூன்று ஆலயங்களுக்கு மேலும் ஒரு சிறப்பு இருக்கிறது. அது என்னவெனில், மூன்று ஆலயங் களிலும் தல விருட்சம், மருத மரம் ஆகும்.

நாறும்பூநாதர் கோவில்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா வீரவநல்லூரில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருப்புடை மருதூர். இங்குள்ள நாறும்பூநாதர் கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். ஊருக்கு மேற்கில் ஆற்றின் கிழக்கு கரையோரமாக அமைந்து உள்ள ஆலயத்தின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளையும், பதினோரு கலசங்களையும் கொண்டுள்ளது. பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கருவறை, விஜயநகர பேரரசர்கள் மற்றும் நாயக்கர்களால் செய்யப்பட்ட திருப்பணி களால் கோவில் சிறப்புற்று விளங்குகிறது.

நாறும்பூநாதர் என்பது இங்கு எழுந்தருளியுள்ள இறைவனின் திருநாமம் ஆகும். இத்தலத்திற்கு திருப்புடைமருதூர் என்ற பெயரோடு மருதபுரம், சுந்தரவனம், புடார்ச்சுனம், தட்சிணகாசி, சுரேந்திரபுரி என்ற பெயர்களும் உள்ளன. தற்போது திருப்புடைமருதூர் என்ற பெயர் மட்டுமே நிலைத்து விட்டது.

ஆதி பிரம்மாவின் மகனாகிய மனு பல சுயம்பு லிங்கங்கள் உள்ள தலங்களுக்கெல்லாம் சென்று வணங்கி வந்த நிலையில் அகத்திய முனிவரின் அருளாணைப்படி இத்தலத்திற்கும் வந்தான். மருத மரத்தின் அடியில் லிங்கமாய் நின்ற சிவபெருமானை கலைமகள், மலைமகள், அலைமகள் ஆகியோர் வழிபடும் காட்சியை தூரத்தில் இருந்து பார்த்த ஆதிமனு தானும் வழிபடுவதற்காக விரைந்து வந்தார். அருகில் வந்ததும் அந்த காட்சி மறைந்ததை கண்டு வருந்திய ஆதிமனு தனது வாளினை மரத்தில் குத்தி தனது தலையை துண்டிக்க முயன்றான். அப்போது மரத்தில் இருந்து ரத்தம் பொங்கியதால் அதிர்ந்து நின்றான்.

அப்போது ‘நிறுத்துக’ என்று அசரீரி ஒலித்தது. உடனே மருத மரத்தின் பொந்தில் இருந்து இறைவன் ஆதிமனுவுக்கு காட்சி கொடுத்தார். சிவபெருமானை வழிபட்ட ஆதிமனு அவ்விடத்தில் இறைவனுக்கு ஆலயம் கட்டுவதற்கு அருள்செய்ய வேண்டும் என்று கேட்டான். இறைவனும் ‘மரத்தின் கீழ்திசையில் சிறிது தொலைவில் அமைந்துள்ள சுயம்பு லிங்கம் இருக்கும் இடத்தில் ஆலயம் எழுப்பி வழிபடுக’ என்று அருள ஆதி மனு அங்கு கோவிலை எழுப்பினான்.

ஆதிமனு கட்டிய கோவில் காலப்போக்கில் மறைந்து விட்டது. அப்போது களக்காடு பகுதியை ஆட்சி செய்த வீரமார்த்தாண்ட மன்னன் இப்பகுதிக்கு வேட்டைக்கு வந்தான். ஒரு மானை கண்டு தனது அம்பை எய்தான். அப்போது மான் மறைந்து விட்டது. ஆனால் மன்னன் எய்த அம்பு மருத மரத்தின் பொந்தில் குத்தி நிற்க, அங்கே சிவலிங்கத்தை மன்னன் கண்டான். உடனே அந்த இடத்தில் மிகப்பெரிய ஆலயத்தை எழுப்பினான்.

கருவூர் சித்தர் பல்வேறு கோவில்களுக்கு சென்று வணங்கி வருகையில் தாமிரபரணியின் வடக்கரை வழியாக வரும்போது மறுக்கரையில் இக்கோவிலை கண்டார். கோவிலுக்கு செல்ல முடியாதபடி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. அங்கு உறையும் இறைவன் பெயர் அறியாத கருவூரார் அங்கிருந்து வரும் மலர்களின் மணத்தை அறிந்து இறைவனை ‘நாறும்பூநாதா’ என சத்தம் போட்டு அழைத்தார். ‘‘நாறும்பூநாதா, உன்னை காண முடியாமல் ஆற்றிலே வெள்ளம் போகிறதே, நான் சொல்வது உனக்கு கேட்கிறதா?” என்று கேட்க இறைவன் தனது திருமேனியை இடப்பக்கம் சரித்து செவிமடுத்து கேட்க சித்தர், வெள்ளத்தை நிற்கும்படி இறைவனிடம் வேண்ட சித்தருக்கு இறங்கி வெள்ளம் வழிவிட்டு நிற்க இறைவனை வணங்கி கருவூர் சித்தர் அருள் பெற்றதாக வரலாறு தெரிவிக்கிறது.

இதன் வெளிப்பாடாக இன்றும் சாய்ந்த நிலையிலேயே பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் புடார்ச்சுன பெருமான். இங்குள்ள அம்மனின் பெயர் கோமதி அம்பாள். அபூர்வமான நீலக்கல் திருமேனி உடைய இந்த அம்பாள் அருளே வடிவானவள். இந்த அம்பாள் பெண்களின் நோய்களை தீர்ப்பதில் சிறப்பானவள். பேய் மற்றும் கெட்ட ஆவி பிடித்த பெண்கள், மனநலம் சரியில்லாதவர்கள் அம்பாள் சன்னிதியில் இருந்து தினமும் வழிபட்டால் 21 நாட்களில் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பெண்கள் தங்களுக்கு ஏற்படும் நோய்கள் நீங்கவும், குழந்தை பேறு கிடைக்கவும் பாயாசம் வைத்து ஆற்றங்கரையில் நீராடி படித்துறையை கழுவி அதில் வைத்து சாப்பிடுவார்கள். இதை படி பாயாசம் என்பர்.

தீர்த்தத்தின் சிறப்பு

புண்ணிய நதியாம் தாமிரபரணி, கடனா நதி, ராமநதி ஆகிய மூன்றும் சங்கமித்து வடக்கு நோக்கி தாமிரபரணி இங்கே உத்தரவாகினியாக ஓடுவதே தனி சிறப்பாய் கருதப்படுகிறது. உலகில் உள்ள தீர்த்தங்கள் எல்லாம் இவளை உபாசனை பண்ணியே தீர்த்த சக்தி பெறுகின்றன. சிவசக்தி ரூபினியான இவள்(ஆறு) பரமசிவன் அம்சமாகவும், பார்வதி அம்சமாகவும் மற்ற அங்கங்கள் பல்வேறு தேவர்கள் அம்சமாகவும் விளங்குகின்றன என தாமிரபரணி மகாத்மியம் என்னும் நூல் கூறுகிறது. இத்தலத்தினை சுற்றி இவ்வாற்றில் பதினோரு தீர்த்தங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இக்கோவிலில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்து இருக்கும். திருநெல்வேலி–பாபநாசம் வழித்தடத்தில் வீரவநல்லூர் சென்று அங்கிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இக்கோவிலுக்கு மினி பஸ், ஆட்டோவில் சென்று வரலாம்.

மும்மூர்த்திகள் வழிபட்ட தலம்

திருமால், பிரம்மன், இந்திரன் முதலான தேவர்கள், அசுரர்களால் தோற்கடிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டபோது சிலகாலம் மறைந்து இருக்க எண்ணினர். எனவே அதற்காக காசிக்கு ஒப்பான திருத்தலம் ஒன்றை காண்பிக்குமாறு சிவபெருமானை வேண்டினர். இறைவன் பிரம்மனிடம், அவரது தண்டத்தை கங்கையில் இட்டு அது எங்கு சென்று நிற்கின்றதோ, அந்த இடமே சிறந்த இடம் என்று அருளினார். அதன்படி பிரம்மதண்டம் கங்கையில் விடப்பட்டது. திருமால் தனது கருட வாகனத்திலும், பிரம்மன் அன்னப்பறவை மீதும் தொடர்ந்துவர அந்த தண்டம் கடலினை அடைந்து பின்னர் தாமிரபரணி ஆறு கடலில் சங்கமமாகும் இடத்திற்கு வந்து நதியில் புகுந்து எதிர் திசையில் சென்று திருப்புடைமருதூர் கோவிலின் மேற்புறம் வந்து குத்தி நின்றது. பின்னர் தேவர்கள் அனைவரும் கூடி இவ்விடத்தில் பிரம்ம தண்டத்தை பிரதிஷ்டை செய்து இறைவனை வணங்கி வழிபட்டு நின்றனர். இந்த இடமே தற்போது கோவில் உள்ள இடமாகும். மும்மூர்த்திகளும் இத்தலத்திற்கு வந்ததால் இத்தலம் பேறு பெற்ற தலமாக திகழ்கிறது.

தைப்பூச  தீர்த்தவாரி  உற்சவம்

திருப்புடைமருதூரை தைப்பூச தீர்த்தவாரி ஊர் என்றும், இங்குள்ள கோவிலை பூக்கோவில் என்றும் இந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள். அந்த அளவுக்கு தைப்பூச திருவிழா இங்கு வெகு சிறப்பாக நடைபெறும். தைப்பூச தீர்த்தவாரியில் கலந்து கொண்டு இத்தலத்து இறைவனை வழிபடுவது மிக சிறப்பாகும். இவ்வாறு வழிபட்டால் ஆண்டு முழுவதும் உடல் நலத்துடன், செல்வ செழிப்பும் கிடைக்கும் என்பது  பக்தர் களின் நம்பிக்கையாகும்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் இவைகளில் மேம்பட்ட தட்சிண காசி என்ற திருப்புடைமருதூரில் அமைந்து உள்ள இக்கோவிலுக்கு பக்தர்கள் வந்து தைப்பூச தீர்த்தவாரியில் நீராடி கோமதி அம்பாள் சமேத நாறும்பூநாதர் சுவாமியை வழிபடுவோருக்கு இறைவனின் திருவருள் நிச்சயம் கிடைக்கும் என்பதில் எள்ளளவும்  ஐயமில்லை.

Next Story