கரூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு


கரூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 29 Dec 2016 4:12 AM IST (Updated: 29 Dec 2016 4:12 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

உப்பிடமங்கலம்,

கரூர் மாவட்டத்தில் உள்ள கோவில் களில் நேற்று அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு வழிபாடு

அனுமன் ஜெயந்தி விழாவை யொட்டி கரூர் மாவட்டம் புலியூர் அருகே கொல்லபாளையத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை, 1008 வடைமாலை, வெற்றிலை மாலை ஆகியவை அணிவித்து பல்வேறு மலர்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஆஞ்சநேயர் புஷ்ப வாகனத்தில் திரு வீதியுலா நடைபெற்றது.

இதேபோல உப்பிடமங்கலம் வடக்கு கேட் பகுதியில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வெண்ணைமலை

கரூர் வெண்ணைமலையில் உள்ள ஆத்மநேச ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 8 மணி அளவில் பல்வேறு வாசனை பொருட்களை கொண்டு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பல்வேறு மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பருவமழை பெய்ய வேண்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

வரசக்தி ஆஞ்சநேயர்

வேலாயுதம்பாளையம் காகித ஆலை குடியிருப்பில் உள்ள வல்லப கணபதி கோவிலில் வரசக்தி ஆஞ்சநேயருக்கு காலை 8.30 மணிக்கு வடைமாலை சாத்தப்பட்டு தீபாராதனை நடந்தது.

பின்னர் இரவு 7 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவு 7.30 மணி அளவில் வெற்றிலை மாலை அலங்காரத்துடன் திருத்தேர் பவனி நடந்தது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை காகிதபுரம் அனுமன் பக்தர் குழுவினர் செய்திருந்தனர்.

அய்யப்பன் கோவில்

வேலாயுதம்பாளையம் புகழிமலை அருகே உள்ள அய்யப்பன் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.

இதைத்தொடர்ந்து சாமிக்கு துளசி மாலை, வெற்றிலை மாலை ஆகியவை அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. சேங்கல்மலை வாரி வரதராஜ பெருமாள் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.
இதையொட்டி திராட்சை உள்ளிட்ட 16 வகை கனிகளால் கோவில் முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

Next Story