ஆண்டவர் தரும் பாதுகாப்பு


ஆண்டவர்  தரும்  பாதுகாப்பு
x
தினத்தந்தி 6 Jan 2017 12:15 AM GMT (Updated: 5 Jan 2017 2:35 PM GMT)

ஜப்பான் நாட்டில் மச்சிகோ என்றொரு பெண்மணி இருந்தார். அவருக்குத் திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் பிறந்தனர். கணவன் திடீரென இறந்து போக குடும்பம் வறுமையில் விழுந்தது. ஒரு நாள் ரெயிலில் ஹிரோஷிமா நோக்கி செல்கிறார். போகும் வழியில் ஒரு பாலம் வரும். பாலத்திலிருந்து

ப்பான் நாட்டில் மச்சிகோ என்றொரு பெண்மணி இருந்தார். அவருக்குத் திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் பிறந்தனர். கணவன் திடீரென இறந்து போக குடும்பம் வறுமையில் விழுந்தது. ஒரு நாள் ரெயிலில் ஹிரோஷிமா நோக்கி செல்கிறார். போகும் வழியில் ஒரு பாலம் வரும். பாலத்திலிருந்து குழந்தைகளோடு கீழே குதித்து இறந்து போக வேண்டும் என்பது அவளுடைய  திட்டம்.

பாலம் நெருங்கியதும் கடவுளின் குரல் அவளது காதில் ஒலித்தது, ‘நான் உன்னைக் கரம் பிடித்திருக்கிறேன். நான் உன்னை வழிநடத்துவேன்’ என்று அந்த குரல் சொன்னது.

தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டு ஹிரோஷிமாவில் ஒரு மருத்துவமனையில் சமையல் வேலையில் சேர்ந்தார். சில ஆண்டு களில் சமையலறை மேலதிகாரியானார்.

1945–ம் ஆண்டு ஒரு நாள், ‘வேலையை விட்டுப் போ, மலைநாட்டுக்குப் போ’ என அவளுடைய மனதுக்குள் இறைவனின் குரல் ஒலிக்கிறது. உடனே புறப்படுகிறார்.

மருத்துவமனையோ அவளுக்கு சம்பளத்தை இரட்டிப்பாய் கொடுக்கலாம் என அழைத்தது. அதை நிராகரித்து இறைவனின் குரலுக்குச் செவிகொடுத்து பிள்ளைகளோடு தொலைவில் இருந்த மலைநாட்டுக்குப் போனார்.

1945–ம் ஆண்டு ஆகஸ்டு 6–ந் தேதி காலை 8.20 மணிக்கு ஹிரோஷிமாவில் அணுகுண்டுகள் வீசப்பட்டது. ஒருவரும் பிழைக்கவில்லை. மச்சிகோ மலைநாட்டில் பாதுகாப்பானார். பெண்களை வளர்த்து ஆளாக்கி மூன்று பேரையும் இறை பணிக்காக அர்ப்பணித்தார். அவர்கள் மூன்று பேரும் கென்யா, ஜமைக்கா, இந்தியா என மூன்று இடங்களில் இறைபணியை வெற்றி கரமாக நடத்தினர்.

இது இறைவன் அவர்களுக்காய் வைத்திருந்த திட்டம்.

இதே போன்ற ஒரு திட்டத்தை இறைவன் நமக்காகவும் வைத்திருக்கிறார். நமது இறைவன் ஒரு இமைப்பொழுதுகூட மக்களை விட்டுத் தனது பார்வையை விலக்கிக் கொள்வதில்லை. தன்னை அடையாளப்படுத்தும்போது கூட ‘ஆபிரகாம், ஈசாக், யாக்கோபின் கடவுள்’ என தன்னை மனிதத் தலைமுறைகளோடு அடையாளப்படுத்துகிறார்.

கரம் பிடிக்கும் கடவுள்


பைபிள், யோசேப்பு எனும் இறைமனிதரின் வாழ்க்கையைப் பேசுகிறது. பதினேழு வயதில் அவருடைய கரத்தைப் பிடித்தார் கடவுள். நூற்றுப்பத்து வயது வரை கரம் விடாமல் வழிநடத்தி வந்தார். அதே கடவுள் தான் நமது கரங்களையும் பிடித்திருக்கிறார்.

ஆபிரகாமுக்கு 75  வயதாக இருக்கும் போது அவருக்கு கடவுளின் அழைப்பு வருகிறது. ஆபிரகாம் கிளம்புகிறார். கடவுள் ஆபிரகாமை வழிநடத்திச் செல்கின்றார்.

ஈசாக்கை பலியிடச் செல்லும்போது கடவுள் ஈசாக்கின் கரத்தைப் பிடிக்கிறார். ஈசாக் கடவுளின் வழிநடத்துதலுக்குள்  வருகிறார்.

பெத்தேலில் யோசேப்பைக் கரம் பிடிக் கிறார் கடவுள். யோசேப்பு கனவு காண்கிறார். வானத்துக்கும் பூமிக்கும் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் ஏணியில் வானதூதர்கள் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தனர். அந்த காட்சியின் ஊடே யோசேப்பின் கரம் பிடிக்கிறார் கடவுள்.

இப்படி முற்பிதாக்களைக் கரம்பிடித்து வழிநடத்திய இறைவன் தான் இன்று நம்மோடு இருக்கிறார். அவர் கரம் பிடிப்பதற்கு வயதைப் பார்ப்பதில்லை, நமது அறிவைப் பார்ப்பதில்லை, நமது ஞானத்தைக் கணக் கிடுவதில்லை. நமது கரத்தை அன்பினால் பற்றுகிறார்.  

வழிநடத்தும் கடவுள்

கடவுள், கரம் பிடித்த கடவுள் மட்டுமல்ல, வழிநடத்திச் செல்லும் கடவுளாகவும் இருக்கிறார். கடவுள் நமது கரத்தைப் பிடித்திருக்கிறார் என்றால் நமக்கான வளமான ஒரு எதிர்காலத்தை அவர் ஆயத்தமாய் வைத்திருக்கிறார் என்பது தான் பொருள்.

ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு, யோசேப்பு என அவர் கரம் பிடித்து வழிநடத்திய இறைமனிதர்களின் பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

‘நைல் நதிக்குழந்தை மோசே’– அவர் இறைவனின் கரம் பற்றி நடந்த மாபெரும் விடுதலையாளர்.

‘கடவுளின் அருகாமையில் படுத்திருந்த குழந்தை சாமுவேல்’– அவர் மாபெரும் இறைவாக்கினரானார்.

‘சாமுவேலது வார்த்தை எதையும் அவர் தரையில் விழவிடவில்லை (1 சாமுவேல் 2:19) என்கிறது விவிலியம்.

இப்படி விவிலியம் முழுவதும் இறைவன் கரம்பிடித்த நபர்களின் பெயர்களும், அவர் வழிநடத்திய வரலாறுகளும் நிரம்பியிருக்கின்றன.

நாம் அறியாத நமது எதிர்காலம் அவருக்குத் தெரியும், ஏனெனில் நாம் கருவில் உருவாகும் முன்பே நமது எதிர்காலத்தை அவர் அறிந்திருக்கிறார்.

காக்கும் கடவுள்

நம்மைச் சுற்றி நடக்கின்ற வி‌ஷயங்கள் நமக்கு புரியாதவையாய் இருக்கலாம், நமது வாழ்க்கை அலைக்கழிக்கப்படுவதாய்த் தோன்றலாம். ஆனால் காக்கும் கடவுள் நம்மோடு இருக்கிறார்.

யோசேப்புக்கு வந்த சோதனைகளில் இருந்து கடவுள் உடனிருந்து அவரைக் காக்கிறார். ‘எந்தத் தடைகளையும் உடைக்கின்ற இறைவன் நம்மோடு இருக் கிறார்’ என்பது நமக்கு மிகப்பெரிய ஆறுதல்.

கரம்பிடித்து, வழிநடத்தும் கடவுள் நம்மைக் காக்கிறார். சோதனைகள் நம்மைப் புரட்டித் தள்ளும் போது நமக்கு ஒன்றும் தெரிவதில்லை. ஆனால் அவற்றைத் தாண்டும்போது தான் நமக்குப் புரியும், நம்மை இறைவன் அற்புதமாய்க் காப்பாற்றியிருக்கிறார் எனும் உண்மை.

ஒரு அடர்த்தியான காட்டில் மூங்கில் மரங்கள் வெட்டப்படுகின்றன. சில துண்டுகள் தனியே எடுத்து வைக்கப்பட்டன. மற்ற துண்டுகளெல்லாம் மகிழ்ந்தன. ‘அப்பாடா நாம் தப்பி விட்டோம்’ என சிரித்தன.

தனியே எடுத்து வைக்கப்பட்ட துண்டுகள் நெருப்பிலிடப்பட்டு, துளையிடப்பட்டு புல்லாங்குழல் ஆயின.

மற்ற துண்டுகளை எடுத்த மனிதர், அவற்றை ஊதாங்குழல் ஆக்கினார். கடவுள் நம்மைக் கரம்பிடிக்கிறார் எனில், புல்லாங்குழலைப் போல நமக்கு இனிமையான ஒரு வாழ்க்கையை வைத்திருக்கிறார் என்று பொருள்

கனப்படுத்தும் கடவுள்

நம்மைக் காக்கும் கடவுள் நமக்கு கனத்தைப் பெற்றுத் தரும் கடவுளாக இருக் கிறார். நம் வழியாக இன்னொருவரையும் ஆசீர்வதிக்க இறைவன் தயாராய் இருக் கிறார். யோசேப்பின் மூலம் அவரது எஜமானரை ஆசீர்வதித்தார் இறைவன்.

நம்மால் இன்னொருவர் இறை ஆசீரைப் பெறுவது இறைவன் நமக்கு தரும் மிகப் பெரிய கவுரவம்.

இந்த 2017–ம் ஆண்டில் இறைவன் நமது கரத்தைப் பிடித்திருக்கிறார், நம்மை வழி நடத்துகிறார், நம்மை காப்பாற்றுகிறார், நம்மை கனப்படுத்துகிறார் என விசுவாசிப்போம்.

இறையாசீர் உங்களை நிரப்பட்டும்.

ஞா.வெலிங்டன் ஜேசுதாஸ், நல்மேய்ப்பர் ஆலயம், வேளச்சேரி, சென்னை.

Next Story