22. திருப்பாவை - திருப்பள்ளியெழுச்சி


22. திருப்பாவை - திருப்பள்ளியெழுச்சி
x
தினத்தந்தி 6 Jan 2017 6:30 AM GMT (Updated: 6 Jan 2017 6:30 AM GMT)

திருப்பாவை அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே சங்கம் இருப்பார்போல் வந்துதலைப் பெய்தோம் கிங்கிணி வாய்ச்செய்த

திருப்பாவை

அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்துதலைப் பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போல
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்


அழகிய இந்த பூமியை ஆண்ட அரசர்கள் அனைவரும் 'தாமே நிகரில்லாதவன்' எனும் அகந்தையை அழித்துவிட்டு, நீயே உயர்ந்தவன் என நினைத்து நீ பள்ளி கொண்டு இருக்கும் படுக்கையின் அருகில் கூடி இருக்கின்றனர். அவர்களைப் போல நாங்களும் உனது அருளை நாடி  உன்னை வந்தடைந்தோம். கிண்கிணியின் வாயைப் போன்று மலர்ந்து இருக்கும், தாமரைப் பூவைப்போன்று கொஞ்சம் கொஞ்சமாய்ச் சிவக்கும் உன் கண்களின் பார்வை எங்கள் மீது விழக்கூடாதா? சந்திரனும் சூரியனும் போன்ற உன் இரு கண்களால் நோக்கினால் எங்கள் சாபம் நீங்கி உன் அருள் பெறுவோம்.

திருப்பள்ளியெழுச்சி

அருணன் இந்திரன் திசைஅணுகினன் இருள்போய்
அகன்றது உதயம் நின்மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலரமற் றண்ணல் அங்கண்ணாம்
திரள்நிரை யறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்தருளாயே.   


சூரியனின் தேர்ப் பாகனாகிய அருணன், இந்திரன் திசையான கிழக்கு திசையை அடைந் தான். இருள் முழுவதும் நீங்கி விட்டது. உனது திருமுகத்தில் கருணைச் சூரியன் எழுந்து விட்டான். உன்னுடைய கண்களாகிய மண மலர்கள் மலர்ந்தன. வண்டினங்கள் இசை பாடுகின்றன. திருப்பெருந்துறை யில் வாழும் சிவ பெருமானே! அருளாகிய செல்வத்தை எங்களுக்கு கொடுக்க வரும் ஆனந்த மலையே! அலைகள் நிறைந்த ஆழமான கடல் போன்றவனே! உனது திருப்பள்ளியில் இருந்து எழுந்தருள்வாய்.


Next Story