திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆருத்ரா தரிசனம்: பூச்சப்பரத்தில் நடராஜர், சிவகாமி அம்பாள் வீதிஉலா


திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆருத்ரா தரிசனம்: பூச்சப்பரத்தில் நடராஜர், சிவகாமி அம்பாள் வீதிஉலா
x
தினத்தந்தி 11 Jan 2017 10:00 PM GMT (Updated: 11 Jan 2017 7:26 PM GMT)

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆருத்ரா தரிசனம்: பூச்சப்பரத்தில் நடராஜர், சிவகாமி அம்பாள் வீதிஉலா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதையொட்டி நடராஜர், சிவகாமி அம்பாள் பூச்சப்பரத்தில் எழந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

ஆருத்ரா தரிசனம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி கோவிலுக்குள் உள்ள மகா மண்டபத்தில் நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு பூஜையும், மகா தீபாராதனையும் நடந்தது.

இதைதொடர்ந்து வெள்ளை பட்டு அணிந்து நடராஜர் சிம்மாசனத்திலும், பச்சை பட்டு உடுத்தி சிவகாமி அம்பாள் வெள்ளி அம்பாரி வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதன்பின்பு மேளதாளங்கள் முழங்க பூச்சப்பரத்தில் நடராஜரும், சிவகாமி அம்பாளும் தனித்தனியாக எழுந்தருளி சன்னதி தெரு, கீழரத வீதி பெரியரத வீதி வழியாக 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள கிரிவலப்பாதையில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

திருமங்கலம் கோவில்

திருமங்கலத்தில் உள்ள சொக்கநாதர் மீனாட்சி கோவிலிலும் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதையொட்டி நடராஜர், சிவகாமி அம்பாள் பூச்சப்பரத்தில் சர்வ அலங்காரத்துடன் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கோவிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக சாமி, அம்பாள் ஊர்வலம் சென்றது.

அதன்பின்பு நடராஜர், சிவகாமி அம்பாளுக்கும், மூலவர் சொக்கநாதருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. முடிவில் பக்தர்களுக்கு பூ மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோன்று திருமங்கலம் பெரிய கடைவீதியில் உள்ள நாடார் உறவின் முறைக்கு பாத்தியமான மாரியம்மன் கோவிலிலும் ஆருத்ரா தரிசனம் நடந்தது. விழாவையொட்டி பத்ரகாளியம்மன் சிம்ம வாகனத்திலும் மாரியம்மன் காளை வாகனத்திலும் பூச்சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story