அம்பாளுக்கு வழிகாட்டிய லட்சுமிதேவி


அம்பாளுக்கு வழிகாட்டிய லட்சுமிதேவி
x
தினத்தந்தி 17 Jan 2017 3:00 AM GMT (Updated: 16 Jan 2017 1:02 PM GMT)

காசியில் மரிப்போருக்கு, அவர்களது செவிகளில் சிவபெருமானே ‘ராமநாம’த்தை ஓதுகிறார் என்பது புராண வழி வந்த நம்பிக்கை.

காசியில் மரிப்போருக்கு, அவர்களது செவிகளில் சிவபெருமானே ‘ராமநாம’த்தை ஓதுகிறார் என்பது புராண வழி வந்த நம்பிக்கை.   ஆனால், அனைவரும் காசிக்கு சென்று இறைவனை தரிசிக்க முடிவதில்லை என்பதே நிதர்சனம்.

அன்னையின் தவம்


எனவே காசிக்குச் சென்று இறைவனை தரிசிக்க இயலாதவர்களுக்காகவும், அவர்கள் காசியில் இறைவனை தரிசித்த பலனைப் பெற வேண்டியும் அன்னை விசாலாட்சி இறைவனை நோக்கி தவமிருந்தாள். அன்னையின் தவத்தால் இறைவன் மகிழ்ந்தார்.

அவர் பார்வதியின் முன்பாக தோன்றி, ‘பார்வதி! காசியின் சக்திகளைக் கிரகித்து, பல தலங்களில் நிரவுதல் வேண்டும் என்பது தானே உன் ஆசை? கவலை வேண்டாம். வாரணாசியில் உள்ள சுயம்பு லிங்க ரூபங்களை வழியில் கீழே வைக்காமல், தலையில் சுமந்து சென்று பிரதிஷ்டை செய்யும் தலங்களிலும் எல்லாம் நான் அருள்பாலிப்பேன்’ என்று அருள் செய்தார்.

இதன்படி பலரும் காசியில் இருந்து தலையில் சுமந்து வந்து உருவாக்கிய லிங்க பிரதிஷ்டை தலங்களில், காசி விசுவநாதர் சன்னிதிகள் தோன்றின. காசி விசுவநாதர் சுயம்புவாய் தோன்றிய தலங்களும் உண்டு. இப்படிப்பட்ட தலங்களில் ஒன்று வாளாடி. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் விசுவநாதர். இறைவி விசாலாட்சி அம்மன்.

ஆலய அமைப்பு

இந்தத் திருத்தலம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலய முகப்பைத் தாண்டியதும் அகன்ற பிரகாரம். எதிரே கோபுர பிள்ளையார் அருள்பாலிக்கிறார். தெற்கு பிரகாரத்தில் திரும்பி வலது புறம் சென்றால், மகா மண்டபம். அந்த மண்டப வாசலின் எதிரே அன்னை விசாலாட்சி சன்னிதி உள்ளது. அம்மன் சன்னிதியின் அர்த்த மண்டப நுழை வாயிலின் இடது புறம், தட்சிண துர்க்கை நின்ற கோலத்தில் தென் திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். இந்த துர்க்கையின் உருவம் மிகவும் பெரியது. அர்த்த மண்டபத்தைக் கடந்ததும் இறைவனின் கருவறையை தரிசிக்கலாம். இங்கு லிங்கத் திருமேனியுடன் விசுவநாதர் மேற்கு திசை நோக்கி வீற்றிருக்கிறார். இறைவனுக்கு மாத்ரு பூதேஸ்வரர் என்ற பெயரும் உண்டு.

தேவகோட்டத்தில் தெற்கில் தட்சிணாமூர்த்தி, நடராஜரும், வடக்கில் துர்க்கையும், வடகிழக்கில் நவக் கிரக நாயகர்களும், கிழக்கில் சூரியன் மற்றும் பைரவரும் இருக்கின்றனர். திருச்சுற்றின் மேற்கு திசையில் பிள்ளையாரும், சுப்பிரமணியரும் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். வடக்குப் பிரகாரத்தில் சண்டீஸ்வரர் சன்னிதி உள்ளது. சுப்பிரமணியர் சன்னிதிக்கு நேர் எதிர் சுவற்றில், ஒரு சாளரம் பொருத்தப்பட்டுள்ளது. அதில் உள்ள துவாரம் வழியாக பார்த்தால் கருவறை மூலவரின் தரிசனம் தெளிவாகக் கிடைக்கும்.

துர்க்கை கதை

இங்குள்ள தட்சிண துர்க்கைக்கு தனிக் கதை ஒன்று உள்ளது. என்ன கதை அது?

திருக்கயிலாயத்தில் பார்வதிதேவி, சர்வேஸ்வரனுக்கு தினசரி பூஜை செய்வார். அத்துடன் நைவேத்தியமாக இறைவனுக்கு பிரசாதம் வைப்பார். அதை உண்பதன் மூலம் இறைவன் உலக உயிர்களுக்கு படியளப்பார். சிவபெருமான் எப்பொழுதும் கண்களை மூடியபடி யோகநிலையில் இருப்பார். இருப்பினும் பூஜையின் போது சில நேரங்களில் கண் களைத் திறந்து பிரசாதத்தை ஏற்றுக்கொண்டு, மீண்டும் யோக நிலையைத் தொடர்வார்.

ஒரு முறை சிவபெருமான், கண்களைத் திறக்காமலேயே, பார்வதி படைத்த நைவேத்தியத்தை ஏற்றுக்கொண்டார். அதற்கான காரணம் அம்பாளுக்கு புரியவில்லை. இதைக் கண்ட அம்பிகை கவலை கொண்டாள். அப்பொழுது நாரதர் அங்கு வந்தார்.

‘தேவி! சர்வேஸ்வரனின் ஒவ்வொரு செய்கைக்கும், கோடிக்கணக்கான காரணங்கள் இருக்கும். எனவே தாங்கள் தெளிவு பெற வேண்டு மானால், மானுட வடிவில் பூலோகம் சென்று வழிபடுங்கள்’ என்று நாரதர் கூறினார்.

அதன்படியே பார்வதிதேவியும் மானிட பெண்ணின் உருவம் கொண்டு பூலோகம் வந்தாள். அம்பிகை ஒவ்வொரு வீடாகச் சென்று தன் வினாவிற்கு விடை கேட்டாள். எவராலும் விடை தர முடியவில்லை. வழியில் ஒன்பது வயது சிறுமி ஒருத்தி எதிர்பட்டாள். அம்பிகையின் வாட்டமான முகத்தைப் பார்த்து காரணத்தை வினவினாள். அம்பிகை நடந்ததைக் கூறினாள்.

‘எனது சங்கு ஒலியைக் கேட்டபடி என் பின்னால் நடந்து வாருங்கள். சங்கொலி நிற்கும் இடத்தில் பதிலும், பதிலளிக்கும் தலமும் கிடைக்கும்’ எனக் கூறிவிட்டு, சங்கை ஊதியபடி அந்தச் சிறுமி முன்னே நடந்தாள். அவளை பின் தொடர்ந்தார் அம்பாள்.

ஓரிடத்தில் சங்கொலி நிற்க சிறுமி மறைந்தாள். அந்த இடத்தில் தெற்கு நோக்கி அருளும் கோலத்தில் துர்க்கை வீற்றிருந்தாள். இதைக் கண்டு பரவசமான அம்பிகை, துர்க்கையை வேண்டினாள்.

‘சர்வேஸ்வரன் ஞானயோக சயனம் பூண்டிருப்பதால், ஜீவ பரிபாலன சக்திகளை அவரிடமிருந்து பெற்றிட வெள்ளை கொண்டைக் கடலை மாலை அணிவித்து, செவ்வாய் மற்றும் வியாழன் தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். இறைவனின் யோக சயன நிலை அருட்பிரவாகமாக மாறும். கண்களைத் திறந்து இறைவன் அருள்பாலிப்பார்’ என்றாள் துர்க்கை.

இவ்வாறு அன்னை வழிபட்ட தெற்கு நோக்கிய துர்க்கை சன்னிதி தலங் களில் ஒன்றே வாளாடி தலமாகும். அன்னைக்கு வழிகாட்டும் சிறுமியாக வந்தவள் லட்சுமிதேவி.

திருச்சியில் இருந்து அன்பில் செல்லும் நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது வாளாடி திருத்தலம்.

–ஜெயவண்ணன்.

பூஜைகளும்.. விழாக்களும்..

மாதப்பிறப்புகள், கிருத்திகை, சிவராத்திரி, பிரதோ‌ஷம் போன்ற நாட்களில் இத்தல இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. திருவாதிரையில் நடராஜர் வீதியுலா நடைபெறும். கந்த சஷ்டி விழா இங்கு சிறப்பானதாகும். வைகாசி விசாகத்தில் இந்த ஆலயம் திருவிழா கோலம் பூண்டிருக்கும். அப்பொழுது முருகபெருமானுக்கு சுமார் 500–க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி, பால் குடம் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். தினசரி இரண்டு கால பூஜை நடைபெறும் இந்த ஆலயம், தினமும் காலை 9 மணி முதல் பகல் 11 மணி வரை திறந்திருக்கும்.

நடனத்தை ரசிக்கும் காரைக்கால்  அம்மையார்

திருவள்ளூரில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருவாலங்காடு. இங்கு வடாரண்யேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் நடராஜரின் பஞ்ச சபைகளில் ஒன்றான ரத்தினசபை உள்ளது. காரைக்கால் அம்மையார், சிவபெருமானைத் தரிசிக்க கயிலாயத்திற்கு தலைகீழாக நடந்து சென்றார். அப்போது சிவன் அவரை, ‘அம்மா..!’ என்றழைத்தார். பின்னர் என்ன வரம் வேண்டும் என்று கேட்டபோது, ‘பிறவாமை வேண்டும். பிறந்தாலும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் வேண்டும்’ என்றார் காரைக்கால் அம்மையார். சிவபெருமான் அப்படியே அருள்செய்தார். அதன்பிறகு ஆலங்காடு வந்த காரைக்கால் அம்மையார், மூத்த திருப்பதிகம்        பாடினார்.

இந்த நேரத்தில் மன்னன் ஒருவனின் கனவில் தோன்றிய சிவன், தனக்கு பின்புறம் காரைக்கால் அம்மையாருக்கு சன்னிதி எழுப்பும்படி கூறினார். அதன்படி மன்னன், நடராஜருக்கு பின்புறம் சன்னிதி எழுப்பினான். இதில் காரைக்கால் அம்மையார் ஐக்கியமானார். இவர் சிவனின் தாண்டவத்தை தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம்.

பஞ்ச பூதங்களின் தலம்

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்சபூதங்கள் என்று அழைக்கிறோம். இந்த பஞ்சபூதங்        களின் இயக்கத்தைக் கொண்டுதான் உலகம் இயங்குகிறது. பரம்பொருளாகிய இறைவன் இந்த பஞ்சபூதங்களில் கலந்திருந்து நம்மை வழிநடத்துகிறார். ஆன்மிக ரீதியாக பஞ்சபூதங்களுக்கும் திருத்தலங்களை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர். அவை; சிதம் பரம் (ஆகாயம்), திருவண்ணாமலை (நெருப்பு), திருவானைக்காவல் (நீர்), காளகஸ்தி (காற்று), காஞ்சீபுரம் (நிலம்) ஆகும். இதில் ஆகாயத்திற்குரிய சிதம்பரம் திருத்தலமே முதன்மையானதும், பழமையானதும் ஆகும். பஞ்சபூத தலங்களுக்குச் செல்லும்போது, சிதம்பரத்தில் தொடங்கி காளகஸ்தி, திருவண்ணாமலை, திருவானைக்காவல், காஞ்சீபுரம் சென்று யாத்திரையை நிறைவு செய்வது மரபு.

சிவபெருமானின் நடனம்

நடனக் கலைக்கு நாயகனாக திகழ் பவர் நடராஜர். நடனங்களின் அரசன் என்பதால்தான் அவரை ‘நடேசன்’ என்றும் அழைக்கிறோம். சிவபெருமான் 108 நடனங்களை ஆடியிருக்கிறார். இதில் அவர் மட்டும் தனித்து ஆடியவை 48. தேவியோடு சேர்ந்து ஆடியவை 36. திருமாலுடன் ஆடியது 9. முருகப் பெருமானுடன் ஆடியது 3. தேவர்களுக்காக ஆடியது 12. சிதம்பரத்தில் இவர் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்தி நிலையை அடைவார்கள் என்பது ஐதீகம். இதனை பார்க்க முக்தி தரும் தில்லை என்று கூறுவர்.

Next Story