இறைவனோடு உறவாடும் வழி


இறைவனோடு உறவாடும் வழி
x
தினத்தந்தி 20 Jan 2017 2:00 AM GMT (Updated: 19 Jan 2017 12:46 PM GMT)

ஒரு துறவி ஆற்றங்கரையில் அமர்ந்து தண்ணீர் ஓடும் அழகையே பார்த்துக்கொண்டிருந்தார்.

ரு துறவி ஆற்றங்கரையில் அமர்ந்து தண்ணீர் ஓடும் அழகையே பார்த்துக்கொண்டிருந்தார். இயற்கையில் ஈடுபட்டு மனம் ஒருமுகப்பட்டதால் மவுனத்தில் ஆழ்ந்தார். அந்த நேரம் இளைஞன் ஒருவன் வந்தான். கடவுளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற தேடல் அவனுக்குள் இருந்தது.

‘சுவாமி! எனக்கு ஒரு சந்தேகம். கடவுள் என்பவர் யார்? அவரைப்பற்றி உங்களுக்குத் தெரிந்தால் எனக்குச் சொல்லுங்கள்’ என்று கேட்டான்.

துறவியோ, அந்த இளைஞர் கூறியது எதுவும் கேட்காதது போல் அமைதியாக இருந்தார்.

அவரது அமைதியைப் பார்த்ததும், ‘நாம் சொன்னது துறவிக்கு கேட்கவில்லை போல’ என்று அந்த இளைஞன் நினைத்தான்.

இதனால் மீண்டும் அவன், ‘சுவாமி! நான் சொல்வது உங்கள் காதில் விழவில்லையா? கடவுள் என்பவர் யார்? அவரைப் பற்றி சொல்லுங்கள் என்று கேட்டேன்’ என்றான்.

அவன் குரல் சற்று சத்தமாக வெளி வந்ததால், துறவி அவனைப் பார்த்தார்.

‘நான் தான் உன் கேள்விக்கான பதிலை சொல்லிவிட்டேனே!’ என்றார்.

இளைஞனுக்கு கடுமையான கோபம் வந்தது. ‘முதலில்  நான் கேட்ட கேள்வியே காதலில் விழாதது போல் இருந்தார். இப்போது  ஒன்றும் பேசாமல், பதில் சொல்லிவிட்டதாக பிதற்றுகிறார்’ என்று எண்ணியவன், ‘என்ன சுவாமி! என்னைப் பார்த்தால் பைத்தியக்காரன் போல் தெரிகிறதா? வாயே திறக்காமல், பதில் சொல்லிவிட்டேன் என்று கூறுகிறீர்களே..’ என்றான் சற்று கோபமாக.

துறவி புன்னகை புரிந்தார். ‘மகனே! நான் சொன்ன பதில் மவுனம்’ என்றார்.

இளைஞனுக்கு இப்போதும் குழப்பம். ‘சுவாமி! தாங்கள் பெரிய ஞானிதான். அதற்காக இப்படி புதிர் போட்டு பேசினால் எனக்கு எப்படி புரியும்? கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்’ என்றான்.

‘ஆன்மிகம் என்பதே மவுனத்தின் வழிதான். எங்கும் நிறைந்திருக்கும் கடவுளை வார்த்தைகளுக்குள், யாராலும் அடக்கிவிட முடியாது. ஒவ்வொருவரும் தனக்குள்ளேயே, தேடிக் கண்டெடுக்க வேண்டிய பொக்கி‌ஷம் இறைவன். அப்படி நமக்குள் தேட வேண்டுமானால் அமைதியான தியானத்தில் ஆழ்ந்து விடுவதே ஒரே வழி. அந்த மவுனமான தியானத்தின் மூலமாகத்தான் நாம் இறைவனோடு உறவாட முடியும்’ என்றார் துறவி.

இறைவனை காண்பதற்கான வழியை அறிந்து கொண்டதும், இளைஞன் மகிழ்ச்சியோடு அங்கிருந்து சென்றான்.

Next Story