அறிவோம் இஸ்லாம் திருக்குர்ஆனில் அறிவியல் கருத்துகள்


அறிவோம் இஸ்லாம்  திருக்குர்ஆனில் அறிவியல் கருத்துகள்
x
தினத்தந்தி 7 Feb 2017 10:18 AM GMT (Updated: 7 Feb 2017 10:18 AM GMT)

திருக்குர்ஆன் இறைவனால் வழங்கப்பட்ட இறுதி வேதம்; அது அற்புதங்களுக்கெல்லாம் அற்புதம்.

திருக்குர்ஆன் இறைவனால் வழங்கப்பட்ட இறுதி வேதம்; அது அற்புதங்களுக்கெல்லாம் அற்புதம். ஆன்மிகப் பெட்டகமான திருக்குர்ஆன், இன்று அறிவியல் ஆய்வுக் களஞ்சியமாகத் திகழ்வது கண்டு அறிவுலகம் திகைப்பிலும், வியப்பிலும் ஆழ்ந்துள்ளது.

1,400 ஆண்டுகளுக்கு முன்னர் மனித அறிவுக்கு எட்டாத பல கருத்துகள் திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளன.

‘பெரு வெடிப்பு கோட்பாடு’ என்பது இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது என்பதைப் பற்றி விளக்க முயலும் ஒரு கோட்பாடு ஆகும்.

தொடக்க நிலையில் இந்த உலகம் ஒரு பெரும் பருப்பொருளாக இருந்தது. அது திடீரென்று வெடித்துச் சிதறியது. அவ்வாறு வெடித்துச் சிதறிய துண்டுகள் மணிக்கு 72 மில்லியன் கிலோ மீட்டர் வேகத்தில் பிரபஞ்ச வெளியில் விலகி ஓடின. அப்போது பிரபஞ்சம் முழுவதும் புகை மண்டலமாகக் காட்சி அளித்தது.

மகா வெடிப்புக்குப் பிறகே நட்சத்திரக் கூட்டங்கள் உருவாயின. மேலும் இவை சூரியனாகவும், பூமியாகவும், சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கோள்களாகவும் உருவாயின.

பிரபஞ்சம் தோன்றிய இந்த நிகழ்ச்சியை,

‘‘கோளங்களும், பூமியும் (ஆரம்பத்தில்) ஒரே துண்டாக (ஒன்றாக)த்தான் இருந்தன. பிற்பாடு நாம் அவற்றைத் தனித்தனியாகப் பிரித்தோம்’’ (திருக்குர்ஆன்–21:30) என்று இறைவன் கூறுகின்றான்.

இன்றைய விஞ்ஞான உலகில் கூறப்படும் பெரு வெடிப்பு கோட்பாட்டை 1400 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் இந்த வசனத்தின் மூலம் எடுத்தியம்புகின்றது.

இந்தப் பேரண்டம் நட்சத்திரக் கூட்டங்கள் உருவாவதற்கு முன்பு புகை மண்டலமாக இருந்தது என்ற அறிவியல் உண்மை மகா வெடிப்பு கொள்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கருத்தையே,

‘‘பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்’’ (திருக்குர்ஆன்–41:11) என்ற வசனம் பிரதிபலிக்கிறது.

விரிந்து கொண்டே செல்லும் பரந்த தன்மை கொண்டதாக இந்தப் பிரபஞ்சத்தை இறைவன் படைத்திருப்பதை, ‘‘மேலும் நாம் வானத்தை (எவருடைய உதவியுமின்றி நம்) சக்தியைக் கொண்டு அமைத்தோம். நிச்சயமாக நாம் விரிவாற்றல் உடையவராவோம்’’ (திருக்குர்ஆன்–51:47) என்ற வசனம் உறுதிப்படுத்துகிறது.

நாம் வாழுகின்ற இந்தப் பிரபஞ்சம், விரிவடைந்து கொண்டிருக்கிறது என்ற பேருண்மையை வானியல் நிபுணர் எட்வின் ஹப்பிள் வெளிப்படுத்தினார்.

இது குறித்து அமெரிக்காவின் மாபெரும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், ‘‘நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் விரிந்து கொண்டே போகின்றது என்ற விஞ்ஞான கண்டுபிடிப்பானது, இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் அறிவுப் புரட்சிகளில் ஒன்றாகவே திகழ்கிறது’’ என்று கூறியுள்ளார்.  

பண்டைய காலத்தில் பூமி தட்டையானது என்ற நம்பிக்கை வெவ்வேறு நிலைகளில் நிலவியது. பின்னர் பல்வேறு காலகட்டங்களில் விஞ்ஞானிகள், இந்த பூமி உருண்டை வடிவிலானது என்ற உண்மையை உறுதிப்படுத்தினார்கள்.

இரவு–பகல் மாற்றம் குறித்து திருக்குர்ஆனில் ஏராளமான வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் பூமி உருண்டை வடிவிலானது என்பதை உணர முடிகிறது.

‘‘நீ தான் இரவைப் பகலில் புகுத்துகிறாய். நீ தான் பகலை இரவிலும் புகுத்துகிறாய்’’ (திருக்குர்ஆன்–3:27) என்றும்,

‘‘நிச்சயமாக அல்லாஹ்தான் இரவைப் பகலில் புகுத்து கிறான். பகலை இரவில் புகுத்துகிறான்’’ (31:29) என்றும் திருமறையில் இறைவன் கூறுகின்றான்.

‘புகுத்துதல்’ என்றால் ஒரு நிலை இருக்கும்போது, அது திடீரென்று மற்றொரு நிலைக்கு மாறி விடாமல், சிறிது சிறிதாக மாறி மற்றொரு நிலையை அடைவதே ஆகும்.

திடீரென்று இரவும், திடீரென்று பகலும் மாறி மாறி வந்து விடுவதில்லை. பூமியின் பாதிப்பகுதியில் சூரிய வெளிச்சம் விழுவதால் அது பகல் என்று அழைக்கப்படுகிறது. அதற்கு எதிர்ப்புறம் உள்ள பகுதி சூரிய வெளிச்சத்திற்கு அப்பாற்பட்டுள்ளதால் அது இரவு என்று அழைக்கப்படுகிறது.

சூரிய வெளிச்சம் படும் பகுதியில், ஒரு பகுதி இரவில் இருந்து விடுபட்டு பகலை நோக்கி வருகிறது. மற்றொரு பகுதி பகலில் இருந்து விடுபட்டு இரவை நோக்கி நகருகிறது. பூமி, உருண்டை வடிவில் இருப்பதால் சூரியனுடைய வெளிச்சம் ஒரே சீராக எல்லாப் பகுதிகளிலும் இருப்பதில்லை. உதிக்கும் பகுதியிலும், மறையும் பகுதியிலும் மிகக்குறைவான வெளிச்சமும், பூமத்திய ரேகை பகுதிகளில் அதிகமான வெளிச்சமும் காணப்படுகிறது. இதைப்போலவே இரவும் வருகிறது.

இப்படி இரவும் பகலும் பல நிலைகளைக் கடந்து மெல்ல மெல்ல புகுத்தப்படுவதால், திருக்குர்ஆனில் ‘புகுத்துதல்’ என்ற சொல்  பயன்படுத்தப்பட்டுள்ளது.

பூமியானது உருண்ட வடிவில் இருப்பதாலும், பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருவதால் மட்டுமே  இரவும் பகலும் மாறி வருவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு.

கீழ்க்கண்ட திருக்குர்ஆன் வசனம், பூமி உருண்டை வடிவானது என்பதை மறைமுகமாகச் சுட்டிக் காட்டு கிறது:

‘‘அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கின்றான். அவனே பகலின் மீது இரவைச் சுருட்டுகிறான். இன்னும் இரவின் மீது பகலைச் சுருட்டுகிறான்’’ (திருக்குர்ஆன்–39:5).

இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள ‘சுருட்டுதல்’ என்பதற்கு ஒன்றின் மீது ஒன்றைச் சுருட்டுதல் என்று கருதலாம். இது தலையில் சுற்றப்படும் தலைப்பாகைக்கு ஒப்பான செயலாகும். தலைப்பாகையும் ஒன்றின் மீது ஒன்றாகச் சுற்றப்படுகிறது. இது பகலின் மீது இரவும், இரவின் மீது பகலும் சுற்றப்படுகிறது என்பதைச் சுட்டுகிறது.

பூமி உருண்டையாக இருக்கும்போதுதான் இரவும் பகலும் சுற்றி வரும் செயல் நிகழ முடியும்.

Next Story