குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில் தேரோட்டம் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர்
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழாவையொட்டி பெண்கள் மட்டுமே பங்கேற்று வடம் பிடித்த தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
தர்மபுரி,
தைப்பூச திருவிழா
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 4–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. இதை தொடர்ந்து சாமி திருகல்யாண உற்சவமும், பொன் மயில் வாகனத்தில் சாமி திருவீதி உலாவும், விநாயகர் தேரோட்டமும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நாளான நேற்று காலை பெண்கள் மட்டுமே வடம் பிடித்த சிவசுப்பிரமணியசாமி தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நிலை பெயர்த்தனர். அதைத்தொடர்ந்து மாலை வாண வேடிக்கையுடன் அலங்கரிக்கப்பட்ட தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏ£ளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து நிலைபெயர்த்தனர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அன்னதானம்விழாவையொட்டி பாரிமுனை நண்பர்கள், வாரியார் அன்னதான அறக்கட்டளை மற்றும் ஏழைகள் அன்னதான கமிட்டி சார்பில், பக்தர்கள், பொதுமக்களுக்கு சிற்றுண்டி மற்றும் அன்னதானம் வழங்கும் விழா நடந்தது. விழாவையொட்டி கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிச்சாண்டவர் உற்சவம் மற்றும் குதிரை வாகன உற்சவமும், நாளை (திங்கட்கிழமை) விழாக்கொடி இறக்கம் மற்றும் பூப்பல்லக்கு உற்சவமும், 14–ந்தேதி(செவ்வாய்க்கிழமை) சயன உற்சவமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் நித்யா, செயல்அலுவலர் முருகன், செங்குந்த சமூகத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்து உள்ளனர்.