ஆன்மிகம்

ஒரே சிற்பியால் வடிக்கப்பட்ட ஐந்து நடராஜர் சிலை + "||" + Carved by the same sculptor for the statue of Nataraja

ஒரே சிற்பியால் வடிக்கப்பட்ட ஐந்து நடராஜர் சிலை

ஒரே சிற்பியால் வடிக்கப்பட்ட ஐந்து நடராஜர் சிலை
பல்லவ மரபின் தோற்றத்துக்குக் காரணமானவனாக கருதப்படுபவன் சிம்மவர்மன் என்னும் மன்னன். இவன் சிவபெருமான் மீது அதிக பக்தி கொண்டிருந்தான்.
ல்லவ மரபின் தோற்றத்துக்குக் காரணமானவனாக கருதப்படுபவன் சிம்மவர்மன் என்னும் மன்னன். இவன் சிவபெருமான் மீது அதிக பக்தி கொண்டிருந்தான். அவனுக்கு, சிவபெருமானின் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்தொழில்களையும் ஒன்றாகக் கொண்ட நடராஜர் தோற்றத்தை, சிலையாக வடிவமைத்து சிதம்பரத்தில் வைத்து வழிபட வேண்டும் என்பது விருப்பம். அந்த விருப்பம் ஒன்றல்ல.. இரண்டல்ல.. ஐந்து நடராஜர் சிலைகளை உருவாக்க காரணமாக இருந்தது. மேலும் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்தில் ஸ்தாபனம் செய்யப்பட்டது. அதைப் பற்றிப் பார்க்கலாம்.


சிதம்பரம்

நடராஜர் சிலை வடிக்க வேண்டும் என்று எண்ணிய சிம்மவர்மன், அதற்காக ஒரு சிற்பியை பிடித்தான். அவர் சோழநாட்டு சிற்பி. அவரது பெயர் நமசிவாய முத்து. மன்னனின் விருப்பப்படி சிற்பியும், நடராஜரின் செப்புச் சிலை ஒன்றை வடித்தார். அந்தச் சிலையின் அழகைக் கண்டு வியந்த மன்னன், தங்கச் சிலை செய்தால் இதைவிட சிறப்பாக இருக்குமே என்று எண்ணினான். சிற்பியிடம் சிலை செய்வதற்குத் தேவையான தங்கத்தைக் கொடுத்து, தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தினான்.

சிற்பியும் தூய தங்கத்தில் நடராஜர் சிலையை செய்தார். சிலையை முடித்துப் பார்த்தபோது, அதுவும் செப்புச் சிலையாகவே தோற்றமளித்தது. இதைக் கண்ட மன்னன், தங்கத்திற்கு ஆசைப்பட்டு தன்னை ஏமாற்றிவிட்டதாக எண்ணி சிற்பியை சிறையில் அடைத்தான். அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய ஈசன், ‘சிற்பியின் மீது தவறில்லை. அவர் வடித்த தங்கச் சிலையை நான்தான் செப்புச் சிலையாக மாற்றினேன். நான் செப்புச் சிலையாக இருக்கவே விரும்புகிறேன். ஏற்கனவே செய்த செப்புச் சிலையை சிற்பியிடம் கொடுத்து தென் பகுதிக்குக் கொண்டு செல்லச் சொல்’ என்றார்.

இதையடுத்து மன்னன், தங்கம் செப்பாக மாறிய சிலையை சிதம்பரத்தில் பிரதிஷ்டை செய்தான். முதலில் செய்த செப்புச் சிலையை சிற்பியிடம் கொடுத்து, ஈசன் கட்டளைப்படி தென்பகுதிக்கு கொண்டு செல்ல பணித்தான்.

செப்பறை

முதன் முதலில் வடிக்கப்பட்ட செப்புச் சிலையுடன் சிற்பி தென் பகுதி நோக்கி புறப்பட்டார். அவருடன் மன்னனின் படைவீரர்கள் சிலரும் பாதுகாப்புக்காகச் சென்றனர். திருநெல்வேலியை நெருங்கியபோது, படைவீரர்கள் சுமந்து வந்த சிலையின் எடை அதிகரிப்பது போல் தோன்றியது. இதுபற்றி அவர்கள் சிற்பியிடம் கூறினர். அவரும், படைவீரர்களை சற்று ஓய்வெடுக்க பணித்தார். சிலையை இறக்கி வைத்து விட்டு அனைவரும் ஓய்வெடுத்தனர்; கண்ணயர்ந்தனர். விழித்துப் பார்த்தபோது நடராஜர் சிலையைக் காணவில்லை.

இது பற்றி சிற்பியும், படைவீரர்களும் அந்தப் பகுதியை ஆண்டு வந்த ராமபாண்டியனிடம் சென்று தெரிவித்தனர். நெல்லையப்பரின் தீவிர பக்தரான ராமபாண்டியன், நடராஜர் சிலை காணாமல் போனது பற்றி கேள்விப்பட்டதும் வருந்தினான். தானும், படைவீரர்களுடன் சேர்ந்து சிலையை மீட்கும் பணியில் ஈடுபட்டான். சிலை திருட்டுப் போன பகுதிக்கு மன்னனும் மற்றவர்களும் சென்றடைந்தனர். அப்போது, அருகிலிருந்த காட்டுக்குள் இருந்து சிலம்பொலிச் சத்தம் கேட்டது. மன்னன், தனது படைவீரர்களுடன் காட்டுக்குள் சென்று பார்த்தான்.

அங்கு ஓரிடத்தில் இருந்து எறும்புகள் வரிசை, வரிசையாகக் குறிப்பிட்ட இடம் நோக்கிச் சென்று கொண்டிருந்ததைப் பார்த்தான். அந்த எறும்புகள் சென்ற வழியில் போய்ப் பார்த்த மன்னன், அங்கு சுயம்புலிங்கம் ஒன்றும், அதன் அருகில் நடராஜர் செப்புச்சிலை இருப்பதையும் கண்டு வியந்து போனான். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. ‘மன்னனே! இந்த இடத்தில் எனக்குக் கோவில் அமைத்து வழிபாடு செய்’ என்றது அந்தக் குரல்.

அதைத் தொடர்ந்து அந்த இடத்தில் கோவில் அமைக்கப்பட்டது. செப்பால் ஆன நடராஜருக்குத் தனிச்சன்னிதி ஏற்படுத்தப்பட்டது. சிற்பியால் செய்யப்பட்ட முதல் செப்புச்சிலை அமைந்திருக்கும் இந்த ஊர் ‘செப்பறை’ என்றழைக்கப்படுகிறது. திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து வடகிழக்கில் ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது ராஜவல்லிபுரம். இங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் செப்பறை திருத்தலம் உள்ளது.

கட்டாரிமங்கலம்

மன்னன் ராமபாண்டியன் தான் தினமும் வழிபடும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலிலும், அதே போன்றதொரு நடராஜர்  செப்புச் சிலையை அமைக்க விரும்பினான். அதே போல் ராமபாண்டியனின் ஆளுகைக்கு உட்பட்ட சிற்றரசனான வீரபாண்டியன் என்பவனும், தன்னுடைய ஆளுகையில் உள்ள கட்டாரிமங்கலத்தில் ஒரு நடராஜர் சிலையை வைத்து வழிபட எண்ணினான்.

இதையடுத்து மன்னன் ராமபாண்டியன் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு ஒன்றும், சிற்றரசன் வீரபாண்டியனின் வேண்டுகோளுக்கேற்ப கட்டாரிமங்கலத்துக்கு ஒன்றும் ஆக இரண்டு செப்புச்சிலைகளைச் செய்து தரும்படி அதே சிற்பியிடம் சொன்னான்.

சிற்பியும், நடராசர் தோற்றத்திலான இரண்டு செப்புச்சிலைகளைச் செய்து முடித்தார். தனக்குரிய செப்புச் சிலையை வாங்கிப் போக வந்திருந்த சிற்றரசன் வீரபாண்டியனுக்கு, சிலைகளின் அழகைக் கண்டதும் மதி மயங்கியது. இரண்டு சிலைகளையும் தானே எடுத்துச் செல்ல எண்ணினான். மேலும் இதே போன்ற சிலையை வேறு யாருக்கும் செய்து கொடுத்து விடக்கூடாது என்பதற்காக சிற்பியின் கையையும் அவன் துண்டித்து விட்டான். பின்னர் அவரது படை வீரர்கள் இருபிரிவாக பிரிந்து இரண்டு சிலை களையும் எடுத்துச் சென்றனர். ஒரு பிரிவினர் கட்டாரிமங்கலம் சென்று அங்குள்ள ஆலயத்தில் செப்புச் சிலையை பிரதிஷ்டை செய்தனர்.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பேய்குளம். இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது கட்டாரிமங்கலம் திருத்தலம்.

கரிசூழ்ந்தமங்கலம்

சிற்றரசன் வீரபாண்டியனின் மற்றொரு படைப்பிரிவினர், இன்னொரு செப்புச் சிலையுடன் வேறு வழியில் சென்றபோது, இடையில் தாமிரபரணி ஆறு குறுக்கிட்டது. அப்போது ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், படைவீரர்கள் அனைவரும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இதில் படைவீரர்கள் அனைவரும் சிலையோடு, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.

சில நாட்களுக்குப் பின்பு, தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் வடிந்ததும், நடராஜர் தோற்றத்திலான செப்புச்சிலை ஒரு கரையில் ஒதுங்கிக்கிடந்தது. இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் அதை ஒரு இடத்தில் வைத்து வழிபடத் தொடங்கினர். இதைப் பற்றி அறிந்ததும் மன்னன் ராமபாண்டியன், அந்தச் சிலையை திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்குக் கொண்டு செல்ல முடிவு செய்தான். ஆனால் அது முடியவில்லை. அன்றிரவு அவன் கனவில் தோன்றிய ஈசன், ‘கரிய மேகங்கள் சூழ்ந்த இந்த இடத்திலேயே இருக்க நான் விரும்புகிறேன். அங்கு எனக்கு ஒரு ஆலயம் அமைத்து வழிபடு’ என்றார். அதன்படி அங்கு ஒரு ஆலயத்தை எழுப்பினான் ராமபாண்டியன். சிற்பியால் செய்யப்பட்ட நான்காவது செப்புச் சிலை கரிசூழ்ந்தமங்கலம் திருத்தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சேரன்மகாதேவி செல்லும் பாதையில் உள்ளது பத்தமடை. இந்த ஊரில் இருந்து மூன்று கிலோமீட்டர் தூரம் சென்றால் கரிசூழ்ந்தமங்கலத்தை அடையலாம்.

கருவேலங்குளம்

இந்த சம்பவங்களுக்குப் பிறகு கையை இழந்த சிற்பிக்கு, மன்னன் ராமபாண்டியன் மரக்கை ஒன்றைத் தயாரித்துப் பொருத்தினான். மரக்கை பொருத்தப்பட்ட பின்பு, அந்தச் சிற்பி மரக் கைகளின் உதவியுடன் ஒரு நடராசர் செப்புச்சிலையைத் தன் உதவியாளர்களுடன் சேர்ந்து செய்யத் தொடங்கினார். அந்த செப்புச் சிலை இதற்கு முன்பு செய்யப்பட்ட நான்கு செப்புச் சிலைகளைக் காட்டிலும் அழகுற காட்சியளித்தது.

அந்தச் சிலையில் அழகில் மயங்கிய சிற்பி, சிலையின் கன்னத்தில் செல்லமாகக் கிள்ளினார். அவர் கிள்ளிய வடு, அந்தச் சிலையின் கன்னத்தில் அப்படியே பதிந்து விட்டது. கிள்ளிய வடுவுடன் கூடிய அந்தச் சிலை கருவேலங்குளம் எனும் ஊரிலிருக்கும் கோவிலில் நிறுவப்பட்டது.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து 37 கிலோமீட்டர் தொலைவில், சேரன்மகாதேவி வழியாகக் களக்காடு செல்லும் பாதையில் இருக்கிறது கருவேலங்குளம் திருத்தலம்.

தொகுப்பு:– தேனி. மு.சுப்பிரமணி.

தொடர்புடைய செய்திகள்

1. வீதியை ஜொலிக்க வைக்கும் விளக்கு பூஜை
தங்களுக்கு பெரும் துன்பத்தை விளைவித்து வந்த அசுரர்களை அழிப்பதற்காக, சிவபெருமானை நாடிச் சென்றனர் தேவர்கள்.
2. இந்த வார விசேஷங்கள் : 29-1-2019 முதல் 4-2-2019 வரை
29-ந் தேதி (செவ்வாய்) சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.
3. கைரேகை அற்புதங்கள் : பெண்களுக்கான திருமணத் தடை ஏன்?
திருமணம் காலா காலத்தில் நடப்பதற்கோ அல்லது தடைபடுவதற்கோ பல காரணங்கள் உள்ளன.
4. புத - ஆதித்ய யோகம் தரும் பலன்கள்...
ஜாதக கட்டத்தில் சூரியனும் புதனும் சேர்ந்து இருந்தால், அதனை ‘புத- ஆதித்ய யோகம்’ என்று கூறுவார்கள்.
5. தீபத்தில் முப்பெரும்தேவியர்
முப்புரம் எரித்த சிவனாரை வழிபடும் விதமாக, திருக்கார்த்திகையில் ஜோதியின் வடிவமாக விளக்குகளை ஏற்று கிறோம்.